Wednesday, June 26, 2013

காதலிப்பதாக கூறி பலபெண்களின் வாழ்கையில் விளையாடிய நபரை பிடிக்க பொலிஸ் செய்த சூட்சுமம்! வலையில் சிக்கினார்.....!

புசல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த ராயப்பு ஜேசுரட்ணம் என்ற 32 வயதான இளைஞன் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அவரை அன்றையதினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி காதலித்து திருமணம் செய்வதாக நடித்து பணம், நகை என்பவற்றை அபகரித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவரால் ஏமாற்றப்பட்டதாக கூறப்படும் வவுணதீவு நாவற்காட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் மட்டக்களப்புப் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார் அந்த முறைப்பாட்டில், தன்னை திருமணம் செய்துக்கொள்வதற்காக 40 ஆயிரம் ரூபா பணத்துடனும் இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பெறுமதியான நகையுடனும் குறித்த நபர் அழைத்து சென்றார்.

இருவரும் கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்தோம். கையிலிருந்த பணம் முழுவதும் செலவழிந்த நிலையில் கொண்டு சென்றிருந்த நகைகளில் ஒரு தங்க மாலையை கொழும்பில் அடகுவைத்தார். அதற்கு பின்னர் நுவரெலியாவிற்கு என்னை அழைத்துச் சென்று சில நாட்கள் வைத்திருந்ததுடன் அங்கும் ஒரு மாலையினை அடகுவைத்தார். இந்நிலையில், திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக போதியளவு பணம் இன்மையினால் கையிலிருந்த இரண்டு காப்புகளை தருமாறு கேட்டார். அதனையும் கழற்றிகொடுத்தேன். வாங்கிச் சென்றவர் பல நாட்களாக திரும்பவேயில்லை அவருடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மட்டக்களப்புக்கு திரும்பினேன் என்றும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வாவின் ஆலோசனையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.கே.கே.குணசேகரவின் வழிகாட்டலில் தமிழ் பெண் பொலிஸார் ஒருவர் அடங்கலாக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

மட்டக்களப்பு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் அந்த தமிழ் பெண் பொலிஸ் குறித்த இளைஞருடைய தொலைபேசி இலக்கத்திற்கு Missed Call விடுத்துள்ளார். தவறிய அழைப்புக்கு தொடர்பினை ஏற்படுத்திய குறித்த நபர் காதல் மொழிகளை பேசி உன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறி கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அந்த பெண்ணை அழைத்துள்ளார். பெண்ணும் பஸ்நிலையத்திற்கு உரியநேரத்திற்கு சென்றுள்ளார். கையடக்கதொலைபேசியுடன் காதலியை வரவேற்பதற்காக ஓடோடிசென்ற இளைஞனை அங்கு சிவிலுடையில் ஏற்கனவே தயாராகவிருந்த பொலிஸார் கைதுசெய்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சந்தேகநபர் அனுராதபுரத்தில் சிங்களப் பெண்ணொருவரையும் இவ்வாறு ஏமாற்றியமை தெரிய வந்துள்ளதாக தெரிவித்த மட்டக்களப்புப் பொலிஸார் மோசடி செய்யப்பட்ட நகைகளை நீதிமன்ற அனுமதியைப் பெற்று மீட்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

1 comment:

  1. காதலிப்பதாக கூறி பலபெண்களின் வாழ்க்கையில் விளையாடிய நபரை பிடிக்க பொலிஸ் செய்த சூட்சுமம்!

    ReplyDelete