இஸ்ரேலிய இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள்!
கடந்த சில காலங்களாக இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியாக சமூகவலையமைப்புகளில் சர்ச்சையில் சிக்கி பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றது. இவ்வாறான சமூகவலையமைப்பு ஒரு பிரச்சினை அடங்கி அதன் சூடு தணிவதற்குள் மற்றைய சர்ச்சை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. அதுதான் இஸ்ரேல் இராணுவ வீராங்கனைகள் சிலர் தமது துப்பாகிகளுடன் உள்ளாடைகள் மட்டும் அணிந்தவாறும், அரைகுறை ஆடையுடனும் படமெடுத்து அவற்றை பேஸ்புக்கில் வெளியிட்டு பெரும் சர்ச்சைக்குள் இஸ்ரேல் இராணுவத்தை உள்ளாக்கியுள்ளனர்.
இஸ்ரால் நாட்டு செய்தி இணையத்தளமான "வாலா" இப்படங்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பெண்கள் இராணுவத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் என்பதுடன் தெற்கு இஸ்ரேலில் உள்ள படைத்தளமொன்றைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் அனைவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தினர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய படங்கள், காணொளிகளை பகிர்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு யுடியூப்பில் இஸ்ரேலிய இராணுவ வீரர் எனக் கூறப்படும் நபரொருவர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ள பலஸ்தீன பெண்ணொருவரை சுற்றி நடமாடும் காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் பலஸ்தீன சிறைக் கைதியொருவருக்கு அருகில் இருந்தவாறு இஸ்ரேலிய இராணுவ வீராங்கனையொருவர் போஸ் கொடுக்கும் படமொன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் இவ்வருட ஆரம்பத்தில் பலஸ்தீனத்துக்கு எதிரான கருத்தை டுவிட்டரில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திருந்தார் இஸ்ரேலிய இராணுவ வீரரொருவர். மேலும் அவரே துப்பாக்கியுடன் நிர்வாண படங்களை வெளியிட்டு கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருந்தார்.
இத்தகைய விடயங்களைக் கருத்தில் கொண்டு முகாமில் சேவையிலிருக்கும் காலப்பகுதியில் சமூக வலையமைப்புகளை தனது இராணுவ வீர, வீராங்கனைகள் உபயோகிக்க இஸ்ரேல் தடை விதித்திருந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள படங்கள் அத்தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளதா என்பது தொடர்பில் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. மேலும் சமூகவலையமைப்புகளில் எவற்றை பகிரவேண்டும் என்பது தொடர்பில் வரைமுறைகள் எதையேனும் இஸ்ரேல் விதித்துள்ளதாக என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. எனினும் தற்போது வெளியாகியுள்ள படங்கள் நிச்சயமாக இஸ்ரேலிய இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment