பாராளுமன்ற உறுப்பினர் அனுறுத்திக பெர்னாண்டோவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!
லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பில் சாட்சியமளிப்பதற்கு ஜூலை 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் அனுறுத்திக பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.
லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பில் சாட்சியமளிக்க பாராளுமன்ற உறுப்பினர் அனுறுத்திக பெர்னாண்டோவை அழைக்குமாறு பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா என்னலிகொட, சட்டத்தரணி ஊடாக இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அனுறுத்திக பெர்னாண்டோ பிரான்சுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை சந்தித்ததாக பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டமையினால், அது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு அவரை சாட்சியமளிக்குமாறு இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஊடகவியலாளர் காணாமல் போனமை தொடர்பாக ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் மேலும் சிலரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அனுறுத்திக பெர்னாண்டோவை இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் எனவும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட, தலையை மொட்டையடித்துக் கொண்டு பிரான்ஸில் மறைந்திருந்து தாய் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார் எனவும், அவரை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினரும் உளவுப் பிரிவினரும் மேற்கொள்ள வேண்டுமென அனுறுத்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment