Wednesday, June 19, 2013

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக ஜீ. பி. எஸ். தொழில்நுட்பம்!

கைதிகள் இந்திய கடற்பரப்பிலா? அல்லது இலங்கை கடற் பரப்பில் இருந்தனர்? என்ற பிரச்சினைக்கு பதில் சொல்லும் ஜீ. பி. எஸ். தொழில்நுட்பம்

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லையை நிர்ணயித்து, சாட்சியை உறுதி செய்யும் பொருட்டு, இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக ஜீ. பி. எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹெரோயின் வைத்திருந்தமை, இறக்குமதி செய்தமை, வியாபாரம் செய்தமை ஆகிய மூன்று குற்றச் சாட்டுக்களின் பேரில் ஐந்து இந்திய பிரஜைகளுக்கும், மூன்று இலங்கை பிரஜைகளுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் கடல் எல்லையை நிர்ணயித்து அடையாளம் காண்பதற்காக இவ்வாறு முதன்முறையாக ஜீ. பி. எஸ். தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

குற்றம் சுமத்தப்பட்டோர் கைது செய்யப்படும் போது அவர்கள் கடலில் இருந்த இடத்தைச் சரியாக அடையாளம் காண ஜீ. பி. எஸ். தொழில்நுட்பத்தை பாவிக்க அரச சிரேஷ்ட சட்டத்தரணி மாதவ தென்னகோன் விடுத்த கோரிக்கைக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன அனுமதி வழங்கினார்.

இந்திய றோலர் படகிலிருந்தவர்கள் சிங்கி படகிலிருந்த இலங்கையர்களுக்கு 955.04 கிராம் நிறையுடனான ஹெரோயின் பார்சல்களை கைமாற்றும் போது கடற்படையினரால் கைதாகினர். அவ்வேளை ஜீ.பி.எஸ். தொழில் நுட்ப உபகரணங்களும் கைப்பற்றபட்டன. இவர்கள் கைதாகும் போது இந்திய கடற்பரப்பிலா? அல்லது இலங்கை கடற் பரப்பில் இருந்தனர்? என்ற பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையில் அரச சிரேஷ்ட வழக்குரைஞர் தென்னக் கோன் ஜீ. பி. எஸ். தொழில்நுட்ப முறையின் ஊடாகப் பெற்ற செய்திப் புகைப்படங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும்.

நீதிமன்றத்தில் வீடியோ புரஜக்டரும் திரை ஒன்றும் பொருத்தப்படும். இதற்கும் நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். உள்ளூர் நீர்ப்பரப்பில் இவர்கள் கைதானதாகக் கடற்படை லெப்டினன்ட் சரித்த குணவர்தனவும், மாலுமி சமித் சானக்கவும் தெரிவித்தனர்.

இந்திய நீர்ப்பரப்பில் கைதாகி இலங்கை நீர்ப்பரப்புக்கு கொண்டு வரப்பட்ட இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர சட்டத்தரணிகள் யோசனை தெரிவித்தனர். கைதான போது படகுகளில் பயன்படுத்தப்பட்ட ஜீ. பி. எஸ். தொழில்நுட்ப உபகரணங்களில் பதியப்பட்டுள்ள புகைப் படங்களை சமர்ப்பிக்க விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டதால் சாட்சியை உறுதிப்படுத்த இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com