‘கிழக்கில் முதலிடுங்கள்’ - கொழும்பில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு!
மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் கிழக்குக்கு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கவென சர்வதேச முதலீட்டாளர் மாநாடொன்று கொழும்பில் நடாத்தப்படவிருக்கின்றது.
கிழக்கு மாகாண விவசாய, கால்நடை வளர்ப்பு, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் மீன்பிடி சுற்றுலா துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹ்மட்டின் எண்ணக் கருவுக்கு ஏற்ப எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இரு தினங்கள் இப்பேரவை நடாத்தப்படவுள்ளது.
கிழக்கு மாகாண விவசாய- கால்நடை வளர்ப்பு- கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி,மீன்பிடி மற்றும் சுற்றுலா அமைச்சு- பொருளாதார அமைச்சினதும்- முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சினதும் ஒத்துழைப்புடன் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து வருகின்றது.
இது தொடர்பாக மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹ்மட் குறிப்பிடுகையில்,
'யுத்தம் காரணமாக கடந்த 30 வருட காலமாகக் கிழக்கு மாகாண வளங்கள் பயன்படுத்தப்படவில்லை. இப்போது யுத்தம் இல்லை. ஆகவே இவ்வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும்- இம் மாகாணத்தின் வேலை இல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு வைக்கவும் முடியும்.
அந்தடிப்படையில் கிழக்கு மாகாணத்திற்கு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கில் முதன் முறையாக ‘கிழக்கில் முதலிடுங்கள்’ என்ற தொனிப் பொருளில் சர்வதேச முதலீட்டாளர் பேரவையொன்றை நடாத்தவிருக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருக்கும் இலங்கையரின் நேரடி முதலீடுகள் உள்ளிட்ட உள்நாட்டு - வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்கும் நோக்கிலேயே இப்பேரவை ஏற்பாடு செய்யப்படுகின்றது. இப்பேரவையில் சுமார் 300 முதலீட்டாளர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கின்றோம். கிழக்கு வளங்கள் நிறைந்த மாகாணம் இங்கு எல்லாத்துறைகளிலும் முதலிட முடியும். அதற்காக உள்நாட்டு- வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம் இதற்கு இப்பேரவை சிறந்த அடித்தளமாக அமையும் என்றார்.
0 comments :
Post a Comment