இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தை துண்டாடுவதற்கான போராட்டம் உச்சக்கட்டத்தில்!
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, ஹைதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் எனக் கோரி மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
இதற்கிணங்க "சலோ அசெம்பிளி" என்ற சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தெலுங்கான கூட்டு நடவடிக்கைக் குழு நேற்று அறிவித்திருந்தது. எனினும் ஆந்திராவை ஆளும் கிரண் குமார்ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அப்போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இப்போராட்டத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக, சுமார் 10,000 பொலிஸாரும் 2,000 மத்திய துணைப் படையினர் பாதுகாப்புப் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அவர்களில் பெரும் பாலானோர் சட்டமன்றப் பகுதியைச் சுற்றியே காவல் பணியில் ஈடுபட்டதாகவும், இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அனைத்து தடைகளையும் மீறி ஹைதராபாத் நகரின் பல இடங்களில் திரண்ட தெலுங்கானா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தெலுங்கானா மாநிலத்தை உடனடியாக அமைக்கவேண்டும் எனக் கூறி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்), பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் திங்கட்கிழமை வரை சட்டமன்றக் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment