Wednesday, June 12, 2013

ஜனாதிபதி வடமாகாண சபை தேர்தலை நடத்தினால் வரலாற்றில் தவறிழைத்தவர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பிடிக்கும்!

"13 ஆவது திருத்தத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் இல்லாவிட்டால் நாட்டில் சிங்கள பௌத்தர்களின் போராட்டம் வெடிக்கும்" - சிங்கள பௌத்த அமைப்புக்கள்!

நாட்டை பிரிக்கும் 13 ஆவது திருத்தத்தை முற்றாக ஒழிக்க வேண்டும், இல்லாவிட்டால் நாட்டில் சிங்கள பௌத்தர்களின் போராட்டம் வெடிக்குமென்று 29 சிங்கள பௌத்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

"ஒற்றையாட்சியை பாதுகாப்போம் மாகாண சபை முறையை ஒழிப்போம்" என்ற தொனிப் பொருளில் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள பௌத்த மகா சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

பொதுபல சேனா, சிங்கள ராவய, ராவணா தேசிய சங்கம் சம்மேளனம் உட்பட 29 சிங்கள பௌத்த அமைப்புகளைச் சோர்ந்த பௌத்த குருமார் உட்பட அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இந்தியாவுடன் சேர்ந்து மேற்குலக நாடுகள் பிரிவினைவாத விஷத்தை வடமாகாண சபைத் தேர்தல் என்ற பெயரில் பரப்ப ஆரம்பித்துள்ளன. வத்திக்கானும் மேற்குலக நாடுகளும் சேர்ந்து வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறும் நடத்தப்பட வேண்டுமென்றும் அறிவித்துள்ளது.

பிரபாகரனின் ஆயுத போராட்டத்தின் பின்னணியில் கத்தோலிக்க சபை இயங்குவதாக இந்தியாவின் யுத்தம் தொடர்பான விசேட நிபுணர் அசோக் சிங் தெரிவித்திருந்தது. இன்று இது உண்மையாகியுள்ளது எனவும், கத்தோலிக்க சபை 13 இற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் இந்த உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

மேலும், 1987 இல் ஜே.ஆரின் அடக்குமுறைக்கு மத்தியில் சிங்கள இளைஞர்கள் 66,000 பேரை கொலை செய்து, இந்தியாவினது தேவைக்காக பலாத்காரமாக எம்மீது சுமத்தப்பட்டதே 13 ஆவது திருத்தமாகும். இதன்போது விடுதலை புலிகளை நிராயுதபாணியாக்குவோம் என இந்தியா உறுதியளித்தது. ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவும் இல்லை மாகாண சபை முறைமையினால் எந்தவிதமான நன்மையும் கிடைக்கவும் இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும் இல்லை.

26,000 படையினர் உயிர்த்தியாகம் செய்து பாதுகாத்த நாட்டை வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி மீண்டும் பிரிவினைவாதத்திற்கு தள்ளவா அரசாங்கம் முயற்சிக்கின்றது. அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது மனச்சாட்சியை இக் கேள்வியை தட்டிக்கேட்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் அதற்கெதிரான அமைப்புக்களை நடத்தியோர் இன்று அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு 13 ஆவது திருத்தத்தை ஆதரிக்கின்றனர். வடமாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமென்கின்றனர். இத் தேர்தல் நடத்தப்படக்கூடாதென்று கூறும் தேசியவாதிகளும் இந்த அரசாங்கத்தில் உள்ளனர். இவ்வாறான முரண்பாடுகளை கொண்டவர்களுடன் இணைந்து அரசாங்கம் நடத்திய வல்லமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே உள்ளது.

13 ஐ ஆதரிப்பவர்கள் இலங்கையில் இனப்பிரச்சினை உள்ளதா என்று தமது மனச்சாட்சியிடம் கேட்க வேண்டும். ஏனென்றால் கொழும்பில் மடடும் 280,000 அதாவது நூற்றுக்கு 11 வீதம் தமிழ் மக்கள் வசிக்கின்றனர். நாடு பூராவும் பரந்து வாழ்கின்றனர். இனப்பிரச்சினை இருக்குமானால் இப்படி வாழ முடியுமா?

வீதிகள் புனரமைப்பு, பாலங்கள் அமைத்தல் என்பதை விட வடபகுதி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்ப்புகளை மீறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடமாகாண சபை தேர்தலை நடத்தினால் வரலாற்றில் தவறிழைத்தவர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பிடிக்கும் என்றும் காலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com