கிழக்கு மாகாண முதலமைச்சர் செயற்திறன் அற்றவர்! !- கிழக்கு மாகாண அமைச்சர்கள் விசனம்!
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் செயற்திறன் அற்றவர் எனவும், அவரின் செயற்பாடுகள் திருப்தியற்றவையாகக் காணப்படுகின்றது எனவும், அதனால் கிழக்கு மாகாணசபை செயலிழந்து வருகின்றது என, கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் ஏனைய அமைச்சர்களிடம் எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அமைச்சரவை தீர்மானங்கள் எதுவும் கிழக்கு மாகாண சபையில் நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை எனவும், கிழக்கு மாகாண ஆளுநர் அதிகாரிகளை பயமுறுத்தி வருவதாகவும், கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண அமைச்சர்களை மதித்து செயற்படுவதில்லை எனவும், கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையே ஒரு இணைப்பு இல்லாமல் இருக்கின்றது எனவும், கிழக்கு மாகாண அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்புக்குள் நிலவி வரும் முறண்பாடுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற போதே, கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர், இவ்வாறு முதலமைச்சர் மீதும் ஆளுநர் மீதும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனையடுத்து, இவ்விடயங்களை கேட்டறிந்துகொண்ட அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் இதை தெரிவித்து விரைவில் கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்புக்குள் நிலவி வரும் முறண்பாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த உயர்மட்ட கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளாத போதிலும், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்க, எம்.எம்.மன்சூர், எம்.எஸ்.உதுமாலெவ்வை, ஹாபீஸ் நசீர் அகமட், உட்பட கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களான சுசில் பிறேமஜயந்த, மைத்திரிபால சிறிசேன, றிசாட் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment