இலங்கையை உளவு பார்ப்பதற்காகவே அமெரிக்கா திருகோணமலையில் நிலையமொன்றை அமைத்துள்ளது!
"த.தே. கூட்டமைப்பினருக்கு அதிகாரங்களை வழங்கும் நிலையொன்று ஏற்பட்டால், கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கை இணைக்கும்படி கேட்பார்கள் அவ்வாறு இணைக்கப்பட்டால் கிழக்கு, வடக்கிற்கு அடிமையாக வேண்டிய ஒரு நிலை உருவாகும" - விமல்
இலங்கை விவகாரங்களை உளவு பார்ப்பதற்காகவே அமெரிக்கா திருகோணமலை நகரசபையுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு, இலங்கையில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் திருகோணமலை நூலகத்தில் அமெரிக்க நிலையமொன்றை அமைத்துள்ளது எனவும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது தேசத்துரோகமான ஒரு விடயம் எனவும், புகழ்பெற்ற திருகோணமலை துறைமுகத்திற்கு இது ஒரு ஆபத்தான விடயம் என, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் அரசியல் நிலைபற்றி விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நகரசபை கூட்டமைப்பின் கையில் இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது எனவும், இது தேசத்துரோகமான செயல் மாத்திரமல்ல, புகழ்பெற்ற துறைமுகத்தைக் கொண்ட திருகோணமலைக்கும் ஆபத்தான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டமைப்பினர் அவசரமாக அழைத்துள்ளது இந்தியா இலங்கையில் உள்ள உள்விவகாரங்களை பயன்படுத்தி தங்கள் ஆதிக்கத்தை இலங்கை மீது செலுத்துவதற்கு முயற்சிக்கின்றது. கூட்டமைப்பினரை அழைத்திருப்பதன் உள்நோக்கமும் அதுதான். இந்தியாவுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றோம். சம்பந்தனைப் பயன்படுத்தி 13ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாக்க நீங்கள் நினைப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் இந்த நாட்டில் இடமளிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது வேறெந்த நாடோ இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனவும், 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை இல்லாதொழித்த பின்னரே வடக்கு மாகாண தேர்தல் நடாத்த வேண்டும் எனவும், 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்படுமானால் இந்த நாட்டில் மீண்டும் பழைய நிலையொன்று உருவாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபை தேர்தலில் நின்று வெற்றி பெற்றாலும், அவர்களுக்கு குறித்த அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது எனவும், அவ்வாறு வழங்க நாம் தயாராக இல்லை எனவும், அவ்வாறு வழங்கும் நிலையொன்று ஏற்பட்டால் கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கை இணைக்கும்படி கேட்பார்கள் அவ்வாறு இணைக்கப்பட்டால் கிழக்கு, வடக்கிற்கு அடிமையாக வேண்டிய ஒரு நிலை உருவாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment