அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிக விஸா!
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோர் உயிர் இருந்தும் நடமாட முடியாத நிலைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
2012.08.13ஆம் திகதிக்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால், புகலிடம் கோருவோர் உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புகலிட கோரிக்கையாளர்கள் தொழில் செய்ய முடியாது, குடும்பத்தை அவுஸ்திரேலியாவுக்கு எடுக்க முடியாது மற்றும் பணம் அனுப்பமுடியாது ஆகிய மூன்று நிபந்தனைகளுடனேயே தற்காலிக விஸா வழங்கப்படுகின்றது.
2012.08.13ஆம் திகதிக்கு பின்னர் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்தவர்களுக்கே இவ்வாறான நிபந்தனைகளுடன் தற்காலிக விஸா வழங்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பல இலட்சக்கணக்கான பணத்தை கடனாகப் பெற்று இன்று ஒரு சந்தோசமற்ற சூழ்நிலையில் குடும்பத்தார் நடுத்தெருவில் நிற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான பாதுகாப்பற்ற கடல் பயணத்தினை எவரும் மேற்கொள்ளாதிருப்பது சிறந்த செயலாகும் என்பதே எமது அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொண்ட நல்ல படிப்பினையாகும் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
ஆட்கடத்தலை முறியடிப்பதற்கான முயற்சிகளுக்கு உதவும் வகையில், அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை ஆட்கடத்தல் சம்பந்தமான சட்டங்களை ஒருங்கிணைப்பது பற்றிய மாநாடொன்று அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தில், ஆட்கடத்தல் பற்றிய திருத்தங்களின் நிலைமை, ஆட்கடத்தலுக்கு எதிரான சட்ட அமுலாக்கல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல், ஆட்கடத்தல் சட்டங்களை மேலும் ஒருங்கிணைப்பதற்கு அவுஸ்திரேலியாவும், இலங்கையும் இணைந்து பணியாற்றக்கூடிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற விடயங்கள் குறித்து இரு நாடுகளினதும் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment