Tuesday, June 4, 2013

தென்னிலங்கையில் இருந்து யாழ் வரும் பொருட்கள் முடிவுத் திகதி அற்றவை!

யாழ். குடாநாட்டிற்கு தென்னிலங்கையில் இருந்து எடுத்து வரப்படும் பொருட்கள் பலவும் காலம் கடந்தவையாகவும் உற்பத்தித் திகதி அவற்றின் முடிவடையும் திகதி என்பன குறிக்கப்படாமல் வர்த்கர்களால் எடுத்துவந்து வியாபாரம் செய்யப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபை ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

எனவே உணவு கையாளும் நிலையங்களுக்கு புதிய தர நிர்ணயம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாநகரசபை ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் குறிப்பிட்டுள்ளார்.

உணவு கையாளும் தரத்தினை மேம்படுத்தும் நடவடிக்கைகளை யாழ். மாநகர சபை தீவிரப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட எஸ். பிரணவநாதன், இதற்கென எச் 800 படிவம் சகல உணவு கையாளும் நிலையங்களுக்கு பூரணப்படுத்தப்படும் செயற்பாடுகளை யாழ். மாநகர சபை தனது எல்லைக்குள் முன்னிலைப்படுத்தியுளதடன் உணவு கையாளும் சகல நிலையங்களுக்கும் வழங்கப்படவுள்ள சான்றிதழ்களை நிலையங்களின் முன்பாக பார்வையிடக்கூடிய வகையில் வைக்க வேண்டும் என்று யாழ் மாநகர சபை ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஏ தரச் சான்றிதழைப் பெற்ற உணவு கையாளும் நிலையங்கள் தரம் சி யை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனையை மேற்கொள்ளும் சுகாதார பரிசோதகர்கள் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் மற்றும் உணவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களையும் பரிசோதனை செய்வதுடன் சந்தேகமான உணவுப் பொருட்கள் தொடர்பான மாதிரிகளையும் எடுத்துச்சென்று பரிசோதனைகளுக்கு உட்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இருந்து பெறப்படும் மாதிரிகள் அனுராதபுரத்தில் அமைந்துள்ள அரச ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அறிக்கைகள் பெற நடவடிக்கைகளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பொறுப்பதிகாரி மேற்கொண்டுவருகிறார்.

No comments:

Post a Comment