அவுஸ்திரேலியா மாத்திரம் ஏன் எல்.ரி.ரி.ஈ அமைப்பைத் தடைசெய்ய தயக்கம் காட்டுகிறது?....பீரிஸ்
"அவுஸ்திரேலியாவுக்குச் செல்பவர்கள் உண்மையான அகதிகள் அல்ல அவர்கள் அனைவரும் தங்களின் பொருளாதாரத்துக்காக இலங்கையிலிருந்து தப்பி யோடுபவர்கள்" - பீரிஸ்
தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்களும் பொருளாதார வளம் கிடைக்குமென ஏமாற்றப்பட்டு அவுஸ்திரேலியா செல்ல முயற்சிக்கிறார்கள் எனவும், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகுகளில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்பவர்கள் உண்மையான அகதிகள் அல்ல எனவும், அவர்கள் அனைவரும் தங்கள் பொருளாதாரத்துக்காக இலங்கையிலிருந்து தப்பியோடுபவர்கள் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அமைச்சர் பீரிஸ் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தால் புலிகள் தோற் கடிக்கப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள சில எல்.ரி.ரி.ஈ யினர் இலங்கைத் தமிழர்களை படகுகளில் ஏற்றி அவுஸ்திரேலியாவுக்குச் சட்ட விரோதமாகக் ஆட்கடத்தும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை அரசாங்கத்துக்கும், எல்.ரி.ரி.ஈக்கும் இடையிலான யுத்தம் முடிவுபெற்றுள்ள போதிலும் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளின் வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் இப்போதும் கூட வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ள தமிழ் குடும்பங்களை அச்சுறுத்தி பணத்தை அபகரிப்பதுடன், வேறுபல குற்றச்செயல் களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளும், வடஅமெரிக்க நாடுகளும் எல்.ரி.ரி.ஈயின் செயற்பாடு களைத் தடைசெய்துள்ள இவ்வேளையில் ஏன் அவுஸ்திரேலியா மாத்திரம் எல்.ரி.ரி.ஈ அமைப்பைத் தடைசெய்ய தயக்கம் காட்டுகிறது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆட்களைச் சட்டவிரோதமாகக் கடத்தும் தொழில் மூலம் எல்.ரி.ரி.ஈயினர் கடந்த காலத்தில் பெருமளவு வருமானத்தை பெற்றார்கள் என்றும், ஆட்களைக் கடத்துவதை நாம் தனித்து வைத்துப் பார்க்காமல் அதனுடன் வேறுபல குற்றச் செயல்களும் இடம்பெறு வதைக் கூர்ந்து அவதானித்தல் அவசியம். பலவந்தப்படுத்தி பணத்தை அபகரித்தல் மற்றும் போதைவஸ்துக்களின் விற்பனை யிலும் இவர்கள் ஈடுபடுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எல்.ரி.ரி.ஈயினர் அன்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டியும், மக்களை ஏமாற்றியும் சூறையாடிய பெரும்பாலான பணம் இன்னும் அவர்கள் வசம் இருக்கிறதென்றும், இப்போது அவர்கள் அதனை வைத்து பல சரக்குக் கப்பல்களை வாங்கியிருக்கிறார்கள் என்றும் எல்.ரி.ரி.ஈயுடன் தொடர்புடைய பல குழுக்கள் எங்கள் நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
1 comments :
புலியை வைத்து தான் இலங்கை அரசை மிரட்டலாம் , தடை செய்து விட்டு மறைவில் தட்டியும் கொடுப்பார்கள் , இங்கிலாந்தில் புலி கொடி பிடிப்பதை அனுமதிப்பது மாதிரி, அதுவும் தெரியாதா வெளிநாட்டு அமைச்சருக்கு ?
Post a Comment