மனித உரிமையுடன் தொடர்புடைய இருபெண்களை சிறைப்படுத்துகிறது ஸவுதி அரசு!
ஸவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்த கனடாவைச் சேர்ந்த பெண்ணையும் அப்பெண்ணின் மூன்று பிள்ளைகளும் நாட்டை விட்டும் வெளியேறுவதற்காக உதவி செய்தமை குறித்து, ஸவுதி அரேபிய மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த இரு பெண்களுக்கு எதிராக நீதிமன்றம் 10 மாத சிறைத் தண்டனை மற்றும் இரு வருடங்களுக்கு நாட்டை விட்டும் வெளியேற முடியாது என்று தடை .உத்தரவும் பிறப்பித்துள்ளது.
2011 ஜூன் மாதம் 06 ஆம் திகதி தனது கணவன் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எவ்வித உணவு பானங்களும் தராமல் வீட்டினுள் அடைத்து வைத்திருந்ததாக குறிப்பிட்ட நெத்தலி மொரின் எனும் பெண்ணுக்கு உதவி செய்யும் பொருட்டு சென்ற வஜ்ஹா அல் ஹுவைதர் மற்றும் பௌஸியா அல் ஒயூனி எனும் இரு பெண்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பின்னர் 2012 ஆம் ஆண்டு மீண்டும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பெண்ணொருத்தி கணவனுக்கு எதிராகச் செயற்படுவதற்கு உதவி புரிந்ததைமை குற்றம் என்பதால் அவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர். அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ள ஹுவைதர் மற்றும் ஒயூனி குறிப்பிடுகையில் இது பெண்களின் உரிமைகள் பற்றித் தாம் அண்மைக்காலமாக மேற்கொண்டுவரும் செயற்பாடுகளுக்கான அரசாங்கம் கொடுத்துள்ள தண்டனை என்கின்றனர்.
பிரபல ஊடகவியலாளரும் எழுத்தாளரும் சமூக சேவையாளருமான அல் ஹுவைதர் ஸவுதியில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பின் நிருவினருமாவார். மேலும் ‘ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்’ அமைப்பின் மத்திய கிழக்கிற்கான ஆலோசனைக்குழு உறுப்பினருமாவார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment