Thursday, June 27, 2013

அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் படுதோல்வி! ஆட்சி மாற்றம் வருமா?

அவுஸ்திரேலிய தொழில் கட்சி தலைமைத்துவத்துக்கான வாக்கெடுப்பில் பிரதமர் ஜூலியா கில்லார்ட்டை முன்னாள் பிரதமர் கெவின் ருத் தோற்கடித்துள்ளார். மேற்படி தலைமைத்துவத்துக்கான வாக்கெடுப்பில் கெவின் ருத் 57 சதவீத வாக்குகளையும் ஜூலியா கில்லார்ட் 45 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் கட்சித் தலைமைத்துவத்துக்கான வாக்களிப்பை நடத்துவதற்கு அழைப்பு விடுத்த நிலையிலேயே மேற்படி தேர்தல் நடத்தப்பட்டது. கட்சிக் கூட்டமொன்றில் முன்னாள் பிரதமர் கெவின் ருத்தின் ஆதரவாளர்கள் வாக்களிப்பொன்றை நடத்துவதற்கு நிர்ப்பந்தித்ததை தொடர்ந்து அவர் மேற்படி அழைப்பை விடுத்திருந்தார்.

இதன்பிரகாரம் புதன்கிழமை. கட்சித் தலைமைத்துவத்திற்கான இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கட்சித் தலைமைத்துவத்துக்கான வாக்களிப்பில் ஜூலியா கில்லார்ட்டும் கெவின் ருத்தும் போட்டியிட்டனர். மேற்படி வாக்களிப்பில் தோல்வியைத் தழுவும் பட்சத்தில் தாம் அரசியலிலிருந்து விலகுவதாக இரு போட்டியாளர்களுமே வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன் சூளுரைத்திருந்தனர். எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் தொழிற்­கட்சி தோல்வியைத் தழுவ நேரிடலாம் என கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகள் ஊகங்களை வெளியிட்டதையடுத்து, இந்த வாக்களிப்பை நடத்துவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு தேர்தலில் கெவின் ருத்தை தோற்கடித்து ஜூலியா கில்லார்ட் பிரதமராக பதவியேற்றார். எனினும் கெவின் ருத் வாக்காளர்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலம் பெற்ற ஒருவராக விளங்குவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தொழிற்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் கடந்த சில வாரங்களாக கடும் விவாதங்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேற்படி வாக்கெடுப்பை கட்சித் தலைமைத்துவப் பிரச்சினை தொடர்பில் தீர்மானிப்பதற்கான இறுதி வாய்ப்பாக ஜூலியா கில்லார்ட் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது தொழிற்கட்சிக்கு ஒருவர் தலைமை தாங்க பிறிதொருவர் அக்கட்சியின் முக்கிய மாற்று தலைவராக இருக்க எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அரசாங்கத்தையோ அன்றி கட்சியையோ தாம் கொண்டிருக்க முடியாது எனக் கூறிய அவர், இன்றைய வாக்கெடுப்பில் பங்கேற்கும் எவரும் வெற்றி பெற்றால் அவர் தொழில் கட்சியின் தலைவர். தோல்வியடைந்தால் அரசியலைவிட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

எனக்கு போதிய நம்பிக்கை இல்லாவிட்டால் இந்த நிபந்தனையை நானாக முன்வைத்திருக்கமாட்டேன் என்று அவர் கூறியிருந்தார். ஜூலியா கில்லார்ட் மேற்படி கருத்தை வெளியிட்டு சிறிது நேரத்தில் கெவின் ரூத் ஊடகவியலாளர்ளுக்கு விளக்கமளிக்கையில், இது இந்த விடயம் குறித்து தீர்மானிப்பதற்கான தருணம் என நான் நம்புகிறேன். அவுஸ்திரேலிய மக்கள் சாத்தியமான மாற்றுவழியொன்றை தேர்ந்தெடுப்பார்கள் என நான் இதயபூர்வமாக நம்புகிறேன். நான் இந்த வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவினால் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். அதே உறுதியை ஜூலியாவும் எடுத்தமைக்காக அவருக்கு நன்றி கூறுகிறேன்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த வாக்கெடுப்பிலான வெற்றியானது கெவின்ருத்தை அவரது கட்சியின் தலைவராக்கியுள்ள போதும், அவர் பிரதமராக மாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் ஜூலியா கில்லார்ட் தான் பதவி விலகுவதாக ஆளுநர் நாயகம் குயன்ரின் பிரைஸுக்கு கடிதம் எழுதிய பிற்பாடே கெவின் ருத் பிரதமராக பதவியேற்க முடியும். தலைமைத்துவ மாற்றத்துடன் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல அமைச்சர்கள் கெவின் ருத்தின் கீழ் பணியாற்ற விருப்பம் கொண்டிராதவர்களாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com