யாழ் விவசாயத்திணைக்களத்தினரின் அசமந்தப்போக்கால் நஷ்டத்தில் யாழ் வெங்காய விவசாயிகள்!! (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் இம்முறை வெங்காயப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெருவாரியான நஷ்டத்தினை சந்தித்துள்ளனர்.
கடந்த வாரங்களில் நாட்டில் நிலவிவந்த சீரற்ற காலநிலை ஒருபுறமிருக்க இப்போது பயிர்களில் ஒருவிதமான கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதால் அறுவடைசெய்யவேண்டிய காலம் நெருங்குவதற்கு முன்னரே பெரும்பாலான பயிர்கள் கருகியும் அழுகியும் விற்பனைக்கு உதவாதவைகளாக காணப்படுகின்றன. இதனால் பல விவசாயிகள்பெருவாரியான பண நஷ்டத்தினை சந்தித்துள்ளனர்.
இங்குள்ள விவசாயிகளில் அனேகமானவர்கள் வங்கிகளில் கடன் பெற்றும் அயலவர்களிடம் கடன்வாங்கியுமே இந்த பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் இப்போது இவ்வாறான நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அவற்றை திருப்பி செலுத்த முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
இப்பிரச்சனைகள் தொடர்பாக விவசாயி ஒருவரிடம் வினவியபோது, இதற்கு காரணம் இங்குள்ள விவசாயத் திணைக்களத்தினர் எமக்கு சரியான உரங்கள் மற்றும் கிருமிநாசினிகளை வழங்கவில்லை என்றும் மண்பரிசோதனைகளை அவர்கள் எமது பகுதியில் மேற்கொள்வவேயில்லை என்று தெரிவித்தார்.
முன்னைய காலங்களில் இயற்கை உரங்களை பாவித்து பயிர் செய்வதால் மண்ணின் தரம் கெடாமல் இருந்தது இப்போது பாவிக்கப்படுகின்ற செயற்கை உரங்களினால் மண்ணானது நாளுக்குநாள் உயிர்த்தன்மையை இழந்து வருகின்றது. எனவே, இது கிருமிகள் பயிர்களில் எளிதில் தொற்றுவதற்கு வழிவகுத்து விடுகிறது. ஆகவே, ஒவ்வொரு முறையும் மண்பரிசீலனை செய்தால் தான் இவ்வாறான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும், ஆனால் இங்குள்ள விவசாயத் திணைக்களத்தினர் மண்பரிசேதனை செய்வதற்கு முன்வருவதே இல்லை. நாங்கள் இது தொடர்பாக அவர்களிடம் முறையிட்டாலும் அவர்கள் அது தொடர்பில் அக்கறை இல்லாதவர்களாகவே உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இப்பகுதியில் இம்முறை விதைக்கப்பட்ட வெங்காயத்தில் மூன்றில் இரண்டு பகுதி வெங்காயங்கள் கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டு வெட்டி வீசப்பட்டுள்ள இந்த நிலையில் சந்தையில் இப்பொழுது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றது!! ஆனால் யாழ்ப்பாணத்தில் விளையும் வெங்காயங்கள் யாவும் தோட்டங்களிலேயே அழிவைச் சந்திக்காமல் சந்தைக்குவருமானால் ஒரு கிலோ வெங்காயம் 90ரூபாவிற்கும் குறைவாக விற்பனை செய்ய முடியும் என்பது இங்குள்ள விவசாயிகளின் நம்பிக்கையாகவுள்ளது.
எனவே, விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தாம் எடுக்கின்ற மாதச் சம்பளத்திற்கு தகுந்த முறையில் விவசாயிகள் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். கடமையுணர்வில்லாத அதிகாரிகளினால் விவசாயிகள் நாளுக்கு நாள் இடர்படுவது முடிவுறாத கதையாகி வருவதாலும், மக்களுக்கு விவசாயத் திணைக்களத்தின் மீது அவநம்பிக்கை ஏற்படுவதாலும், அதனை நீக்கும்பொருட்டு குறித்த திணைக்களம் இதுபற்றிக் கருத்தில் எடுக்க வேண்டும்!
1 comments :
The officers including the head belong to the agricultural department are answerable to the damage of the crop.we can easily study their motivation once they enter the job either directly or through the backdoor,they relax and lead a gala life.This is mostly the the northern government offices do.We say this through our bitter experiences.Farmers are the backbone of our society.They should be respected for ever.They are the key stone of of our lives.The officers and the head have to answer this serious issue.
Post a Comment