Sunday, June 9, 2013

கணவர் மாரடைப்பினால் இறந்ததாக மனைவி தெரிவிக்கும் அதேவேளை, தமது சகோதரரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக......

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் வெளிநாட்டில் இருந்துவந்து ஒருசில நாட்களில் தமது சகோதரர் இறந்தது தொடர்பில் மரணமானவரின் சகோதரிகளால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பட்டிப்பளை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சடலத்தினை தோண்டி மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை 10ஆம் வட்டாரத்தினை சேர்ந்த ஆறுமுகம் சத்தியசீலன் என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிநாடு சென்று கடந்த மாதம் நாடு திரும்பியிருந்தார். எனினும் அவர் வெளிநாடு சென்றுவந்து ஒருசில நாட்களில் வீட்டில் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் அவர் மாரடைப்பில் உயிரிழந்ததாக குறித்த நபரின் மனைவியினால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், தமது சகோதரர் மாரடைப்பினால் உயிரிழக்கவில்லை எனவும், அவர் திட்டமிட்ட வகையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மரணமானவரின் சகோதரிகளால் பட்டிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து குறித்த சடலத்தினை தோண்டியெடுத்து விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com