கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பபடும் இளைஞன் பொலிஸாரால் கைது! யாழில் சம்பவம்!
தனது கணவன் கடத்திச் செல்லப்பட்டதாக பொய்யாக முறைப்பாடு செய்த மனைவி.
கடந்த 17ஆம் திகதி மாலை யாழ். சண்டிலிப்பாய் சங்குவேலி பகுதியில் வைத்து வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பபடும் இளைஞர் ஒருவரை நெல்லியடி பொலிஸார் கைதுசெய்தாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆணைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த கந்தையா 28 வயதுடைய ஜேசுதாசன் என்ற நபரை கடந்த 17ஆம் திகதி மாலை சண்டிலிப்பாய் சங்குவேலி பகுதியில் வைத்து வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டதாக கூறி, அவரின் மனைவி மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்தார்.
இதற்கிடையே, கடந்த 16ஆம் திகதி அல்வாய் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 6 இலட்சத்தி 85 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கையடக்கத் தொலைபேசி என்பவற்றினை, தனது வீட்டில் வேலை செய்த நபர் ஒருவர் கொள்ளை அடித்துச் சென்றுள்ளதாக, வீட்டு உரிமையாளர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
வீட்டு உரிமையாளரின் முறைப்பாட்டின் பிரகாரம் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு நகைகளை கொள்ளையடித்துச்சென்ற நபரை கைதுசெய்த போது, குறித்த நபர் வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பபடும் இளைஞர் என பொலிஸாருக்கு தெரியவந்தது.
கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தனது கணவன் கடத்திச் செல்லப்பட்டதாக பொய்யாக முறைப்பாடு பதிவு செய்த குறித்த நபரின் மனைவி மீது நடவடிக்கை எடுக்குமாறும், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment