யாழ் ஒஸ்மானியாப் பாடசாலை நிர்வாகத்திற் கெதிராக துண்டுப்பிரசுரம்-பாறூக் சிகான்
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் நிலவும் நீண்ட கால நிர்வாகப்பிரச்சினையை வலியுறுத்தி நேற்று (28.06.2013) அநீதிக்கான மக்கள் முன்னணி எனும் பெயரில் துண்டுப்பிரசுரம் வெளியாகியுள்ளது. நேற்று ஜும்மா தொழுகையின் பின்னர் இப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதனை காணமுடிந்தது.
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் இடம்பெற்று வரும் அதிபர் மற்றும் ஆசிரியர் இருவருக்கிடையில் நிலவும் இப்பிரச்சினை தொடர்பில் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
மாணவர்களின் கல்வியை பாதுகாப்போம் எனும் தலைப்பில், யுத்தத்தின் பின்னர் மீளக்குடியேறி கல்வியில் ஆர்வமாக ஈடுபட்டு வரும் எமது மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதை இனிமேலும் பொறுத்திருந்து பார்க்க முடியாது. ஏனெனில் இப்பிரச்சினை கடந்த மூன்றரை வருடங்களாக இவ்விருவருக்கிடையே இடம்பெறுகின்றது.
இப்பிரச்சினையை அறிய ஆர்வப்படும் மக்கள், ஊடகவியலாளர்களை இவ்விருவரும் தங்களது இஸ்லாமிய போதனையால் வசப்படுத்தியுள்ளனர் .
மேலும் இதனை ஆராய வலயக்கல்வி, கல்வித்திணைக்களம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அப்பாவி மாணவர்கள் இருவராலும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பது இதில் கூறப்பட்டுள்ளது. தங்களது பகையை வைத்துக்கொண்டு தங்களுக்கென சில மாணவர்களை உள்வாங்கி மாறி மாறி ஒருவரை ஒருவர் தூற்றுவதாகவும் அதிபர் தனது அதிகாரத்தை பல முறை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலையின் நிர்வாகப் போக்கு தொடர்பில் இவ்வாறு உள்ளது. பாடசாலையில் சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பதை இடைநிறுத்தி நூலகத்தில் பத்திரிகை பார்ப்பதும் ,சிலர் மணிக்கணக்கில் கைத்தொலைபேசியில் உரையாடுவதையும் குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை பெற்றோர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சபை, பழைய மாணவர் சங்கம் ஆகியன அதிபர் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிற்றூண்டி உணவு ஊழல் மறைத்தமை, தரமற்ற ஈச்சம்பழம் மாணவர்களுக்கு கிடைத்ததை மறைத்தமை, பாடசாலை பௌதிக வளப்பற்றாக்குறையை மறைத்தமை தொடர்பாக அப்பாடசாலை அதிபர் முபாறக் மீது பாடசாலை பெற்றோர் சங்கம், பழைய மாணவர் சங்கம ஆதாரத்துடன் முன்வைத்த குற்றச்சாட்டுக்களாகும்.
இப்பிரச்சினையை தீர்க்க கொழும்பில் இருந்து குற்றப்புலனாய்வு துறையை எதிர்பார்க்கின்றதா? எனக் கேட்டுள்ளதுடன் எதிர்வரும் நோன்பு காலத்திற்கு முன்னர் இப்பிரச்சினைக்கு சரியான தீர்வொன்றை பெற முயற்சிக்க வேண்டும் என அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இல்லாவிட்டால் மாணவர் கல்வி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என மேற்கோள் காட்டி துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மக்கள் சிலர் அவ்விடத்தில் கருத்து தெரிவிக்ககையில் நீண்ட காலமாக இப்பிரச்சினை குறித்த பாடசாலையில் நிலவி வருகிறது.இடையில் அப்பாவி மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் இப்பிரச்சினை தொடர்பாக அதிகாரிகள் உரிய கவனம் எடுத்து இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் .இல்லையெனில் பொதுமக்களாகிய நாங்கள் இதில் தலையிடும் தேவை ஏற்படும் என்றனர்.
0 comments :
Post a Comment