Friday, June 28, 2013

காதலித்த சிறுமியை கடத்திச் சென்று குடும்பம் நடத்திவிட்டு சீதனம் கேட்டு துன்புறுத்திய இளைஞன் தலைமறைவு!

காதலித்த சிறுமியொருவரை கடத்திச் சென்று 9 மாதங் களாக அச்சிறுமியுடன் குடும்பம் நடாத்திவிட்டு தனக்கு சீதனம் வேண்டுமென அச்சிறுமியை துன்புறுத்திய இளைஞன் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பொழுஞ்சாவாடி பிரதேசத்தைச் சேர்ந்த 15வயதுடைய சிறுமியே இவ்வாறு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சந்தேகநபருடன் குறித்த சிறுமி காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்துள்ளார். இதன் நிமித்தம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சிறுமியின் காதலனான இளைஞன் சிறுமியை அவளது பெற்றோரிடமிருந்து கடத்திச் சென்றுள்ளார்.

பின்னர் இருவரும் குளியாபிட்டியில் உள்ள இளைஞனின் தந்தையின் வீட்டில் குடும்பம் நடத்தியுள்ளனர். அவ்வீட்டில் குடும்பம் நடத்திய இருவரும் ஒருமாதத்திற்கு பின் குருநாகலில் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று சில காலங்கள் தங்கியிருந்துள்ளனர். அதன் பின்னர் மீண்டும் வென்னப்புவ கொழுஞ்சாவாடி பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இவ்வாறு இருக்கையில் சந்தேகநபரும் அவரது தாயும் சீதனம் கேட்டு சிறுமியை துன்புறுத்தியுள்ளதுடன் அடித்துமுள்ளனர். இந்த துன்புறுத்தல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிறுமி இது தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்தே குறித்த சந்தேகநபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இந்நிலையிலேயே, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com