Saturday, June 8, 2013

கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை காப்பாற்ற ஹெலிகொப்டர்களை அனுப்பியுள்ள விமானப்படை

சீரற்ற வானிலையினால் பலப்பிட்டி, களுத்துறை, பேருவளை மற்றும் தெஹிவளை அகிய பிரதேசங்களில் ஆழ்கடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இவர்களை காப்பாற்றுவதற்காக விசேட விமானம் மற்றும் ஹெலிகொப்டர்களை அனுப்பியுள்ளதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் எயார் கொமடோ அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாது தெஹிவளை கடலில் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ள மீனவர்களை காப்பாற்றுவதற்காக பெல் - 412 ரக ஹெலிகொப்டர் ஒன்றும், பலப்பிட்டி மற்றும் களுத்துறை கடற் பிரதேசங்களை கண்காணிப்பதற்காக வை - 12 ரக விமானம் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் – கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் அதிக காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவே இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கடுமையான காற்றின் காரணமாக ஹிக்கடுவை தொடரூந்து பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், கடலோர தொடரூந்து சேவை முற்றாக பாதித்திருப்பதுடன் கண்டி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்துக்கு பாதித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதே வேளை தெஹிவளை ரயில் நிலையத்திற்கு முன்பாகவுள்ள கடலிலிருந்து சுமார் 100 கடல்மைல் தூரத்தில் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கின்ற மீனவர்கள் 12 பேரையும் காப்பாற்றுவதற்கு கடற்படையினரும் விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com