Tuesday, June 4, 2013

கொழும்பு துறைமுக களஞ்சியசாலையை ஹம்பாந்தோட்டைக்கு மாற்றவே தீவைக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்கள், நகைப்பானவை !

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான விசாரணையறிக்கை, செயற்திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட இரசாயன பொருட்களே தீவிபத்து ஏற்பட காரணமென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விரைவாக தீப்பற்றக்கூடிய இரசாயன பொருட்கள், ஏனைய பொருட்களுடன் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமையால் தீ ஏற்பட்டுள்ளதாகவும் தீப்பற்றக்கூடிய இரசாயன பொருட்கள், கொள்கலன்களில் காணப்படுவதாக அறிவிக்காது, அவற்றை தருவித்த நிறுவனத்திற்கெதிராக உரிய சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்படுமென செயற்திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தீயினால் 556 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதமேற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படும் நிலையில் தீவிபத்துக்கு காரணமான இரசாயனப்பொருட்களை இறக்குமதி செய்த நிறுவனத்திடமிருந்து நட்ட ஈட்டுத்தொகையை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் செயற்திட்ட அமைச்சர், ரோஹித அபேகுணவர்தன நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தீவிபத்தை தொடர்ந்து கொழும்பு துறைமுக களஞ்சியசாலை தற்காலிகமாக பெஹெலியகொடைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் நவீன வசதிகளுடன் கொழும்பு துறைமுக களஞ்சியம் மீள நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்ப துறைமுக களஞ்சியசாலையை . ஹம்பாந்தோட்டைக்கு மாற்ற வேண்டுமென்பதற்காகவே, களஞ்சியசாலைக்கு தீவைக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்கள், நகைப்புக்குரிய விடயமெனவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தீவிபத்தினால் , பொருட்களை இறக்குமதி செய்து நட்டமடைந்த கம்பனிகளுக்கான நட்டஈட்டுத்தொகை வழங்கப்படுமெனவும், அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment