Thursday, June 13, 2013

இந்திய ராணுவத்தின் ரகசியக் கடிதம் எல்லையில் மாயம்! சீனா வரை போயிருக்குமோ!!

இந்திய சீன எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எழுதப்பட்ட ராணுவ ரகசியங்கள் மாயமாக ‌மறைந்தது குறித்து ராணுவ வீரர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இச்‌சம்பவம், தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

இந்த ரகசிய கடிதம், அசாம் தலைநகர் திஸ்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 4-ம் ராணுவ படைப்பிரிவிலிருந்து ராங்கியா பகுதியில் செயல்படும் 21-வது மலைப்பிரிவு ராணுவ அதிகாரிக்கு எழுதப்பட்டிருந்தது. எல்லைப் பகுதியில் படைப்பிரிவு நடமாட்டம் பற்றிய திட்டமிடல், மற்றும் படையினரை எங்கே நிறுத்த வேண்டும் போன்ற செவ்சிட்டிவ்வான விபரங்கள் இந்த கடிதத்தில் இருந்தன..

2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் அனுப்பப்பட்ட கடிதம் திடீரென மாயமாகி விட்டது.

இந்திய ராணுவ திட்டமிடல் தொடர்பான கடிதம் என்பதால் யாருடைய கைகளில் சிக்கியிருந்தாலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், ராணுவத்துக்கு உள்ளே ரகசிய விசாரணை தொடங்கியது.

இந்த விசாரணைகளில், ஒரு லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் ஐந்து ராணுவ அதிகாரிகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து அவர்‌கள் மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கடிதம் அனுப்பப்பட்ட சமயத்தில் 21-வது மலைப்பிரிவுக்கு மேஜர் ஜெனரல் என்.எஸ். கேய் தலைமையேற்றிருந்தார். இவர் பின்னர் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். இப்போது பாகிஸ்தான் எல்லையை எட்டிய இந்திய பகுதியில் 10-வது ராணுவ படைப்பிரிவுக்கு தலைவராக உள்ளார்.

கடிதத்தில் தற்செயல் தி்ட்டங்கள், ‌வீரர்கள் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள், வழி முறைகள், ஆயுதங்களின் எண்ணக்கை, பயன்படுத்தப்படும் விவரம் போன்றவை குறிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கடிதம் போன இடத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கடிதம் மாயமான விவகாரம் ராணுவ அமைச்சகத்திடம் அப்போது தெரிவிக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

இந்த கடிதம் மாயமான சமயத்தில் ராணுவத் தளபதியாக, பின்னர் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட ஜெனரல் வி.கே. சிங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடிதம் அனுப்பப்பட்ட சமயத்தில் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் ராணுவ வீரர்களை அதிக எண்ணிக்கையில் குவிக்கும் முயற்சியில் இந்திய ராணுவம் தீவிரமாக இருந்தது. 90,000 படை வீரர்களை அங்கு குவிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இவர்களது திட்டம் என்னவென்பதை, ‘மாயமாகி விட்ட’ கடிதத்தை அடித்துக்கொண்டு போன நபர் நிச்சயம் தெரிந்து கொண்டிருப்பார்! கடிதம் சீனா வரை போயிருக்குமோ!



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com