யாழ், வன்னி தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்காளர் குறைநிரப்பு பட்டியல்களை பொதுமக்கள் பரிசீலிக்கலாம் - மஹிந்த.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர்களைப் பதிவு செய்யத் தவறியவர்களும் தம்மைப் பதிவு செய்வதற்கு நாளை மறுதினம் 2 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், மேன்முறையீட்டுக்கான காலம் ஜுலை 9 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களும் 2012ம் ஆண்டிற்காக தமது பெயர்களை வாக்காளர் இடாப்பின் குறைநிரப்புப் பட்டியலில் உட்சேர்த்துக்கொள்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை 2013.06.28 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
எனினும் இதற்கான விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கு தகைமை பெற்றுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் கருத்திலெடுக்கப்பட்டு விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை 2013 ஜூலை மாதம் 02 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்களுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிப் பதற்காக வழங்கப்படுகின்ற கால எல்லை 2013 ஜூலை மாதம் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களுக்குரிய குறைநிரப்புப்பட்டியல்களின் பணிகள் நிறைவு செய்யப் பெற்றுள்ளதாகவும், அப்பட்டியல்கள் அலுவலக நேரங்களில் பொதுமக்களின் பரிசீலனைக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்ட தேர்தல்கள் அலுவல கங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment