Tuesday, June 11, 2013

க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைந்த ஒருவர் கழிவகற்றும் தொழிலுக்கு முன்வருவாரா? - எச்.ரஹ்மான் ஆளுநருக்கு கடிதம்!

கல்முனை மாநகர சபையில் தற்காலிகமாக கடமையாற்றும் 112 ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும்! .

கல்முனை மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற 112 ஊழியர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி தொடர்ந்தும் பணியாற்ற அனுமதிப்பதோடு, அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கும் ஆவன செய்யப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இசட்ஏ.எச்.ரஹ்மான் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜய விக்கிரமவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்முனை மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற ஊழியர்களின் நியமனம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அவர் ஆளுநரிடம் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கடந்த பல வருடங்களாக போதிய சம்பளமின்றி தியாக மனப்பாங்குடன் கடமையாற்றி வருகின்ற இந்த ஊழியர்களின் சேவை இந்த மாநகர சபைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகக் கருதபடுகிறது. இவர்களுள் பெரும்பாலானோர் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளிகளாவர். இவர்களின் பங்களிப்பின்றி கல்முனை மாநகரப் பிரதேசங்களை சுத்தமாக வைத்திருப்பதோ அன்றாடம் குப்பை கூளங்களை அகற்றுவதோ முடியாத காரியமாகி விடும். இதனால் இப்பிரதேசங்கள் யாவும் நாற்றமெடுக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது கிழக்கு மாகாண சபையினால் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆட்சேர்ப்புத் திட்டம் தொடர்பான சுற்றுநிருபம் காரணமாக குறித்த தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீண்ட காலம் கடமையாற்றியும் எவ்வித பயனுமின்றி அவர்களின் தொழில் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்படப் போகிறது என்பதையும் நாம் மனிதாபிமான அடிப்படையில் நோக்க வேண்டியுள்ளது.

இதனால் ஒருபுறம் கழிவகற்றல் பணி ஸ்தம்பிதமடைந்து கல்முனை மாநகரப் பிரதேசங்களில் சுகாதார சீர்கேடுகளும் துர்நாற்றமும் வீசும் என்பதோடு, மறுபுறம் இந்த ஏழைத் தொழிலாளிகளின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி நடுத்தெருவில் நிற்க வேடியேற்படும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் 2013.05.29ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் புதிய ஆட்சேர்ப்புத் திட்டத்தில் வேலைத் தொழிலாளிகளின் அடிப்படை தகைமையாக க.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டு பாடங்களில் "C" அடங்கலாக ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்னர் தரம் 08ஆம் ஆண்டு என்பது வேலைத் தொழிலாளிகளின் அடிப்படை கல்வித் தகைமையாக காணப்பட்டது.

உண்மையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைந்த ஒருவர் கழிவகற்றும் தொழிலுக்கு முன்வருவாரா என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நிச்சயமாக க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் குறைந்தபட்சம் ஒரு தனியார் நிறுவனத்திலாவது இலிகிதர் அல்லது அதற்குச் சமமான ஒரு தொழிலையே நாடிச் செல்வார்கள்.

இந்நிலையில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள இப்புதிய சுற்று நிருபம் இந்த சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

சிலரின் தனிப்பட்ட அரசியல் குரோதங்களுக்காக செய்யப்பட்ட முறைப்பாடுகளைக் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநகர சபையின் அசாதாரண சூழ்நிலைக்கும் கழிவகற்றும் பணியை முடக்குவதற்கும் ஏழைத் தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்பதற்கும் ஒருபோதும் இடமளிக்க முடியாது.

ஆகையினால் குறித்த 112 ஊழியர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி தொடர்ந்தும் பணியாற்ற அனுமதிப்பதோடு, அவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கும் ஆவன செய்யுமாறு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் தங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன் என்று கல்முனை மாநகர சபை உறுப்பினர் இசட்ஏ.எச்.ரஹ்மான் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பி.எம்.எம்.ஏ.காதர்

1 comments :

Anonymous ,  June 11, 2013 at 3:51 PM  

People who do the hard, tough and dirty works should be respected and paid well. How many politicians and high officers get millions for do nothing.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com