Friday, June 21, 2013

நான் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன்.... ஞானஸாரர் காவியுடையைக் களைவாரா? – வாசுவின் சவால்!

எதிர்வரும் தேர்தலில் இரத்தினபுரிக்கு வருகைதந்து, தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கடகொட அத்தே ஞானஸார தேரருக்கு சவால் விடுத்திருக்கின்றார் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.

‘நாட்டின் யாப்பில் குறிக்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வட மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படாதுவிடின் நான் அரசியலை விட்டும் ஒதுங்கிவிடுவேன்’ என அமைச்சர் தெளிவுறுத்தினார்.

வாசுதேவ நாணயக்காரவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸார தேரர் குறிப்பிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில், நேற்று (20) தனது அமைச்சில் ஊடகவியலாளர்களைக் கூட்டி மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அமைச்சர் நாணயக்கார,

‘ஞானஸார தேரர் குறிப்பிடுவது போல எங்களது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வர வேண்டும். தேரரின் சிந்தனையின்படி எங்கள் உயிரையும் நீக்க வேண்டிய காலமும் வந்துவிட்டது போலும். தேர்தல் நடைபெறும்போது இரத்தினபுரிக்கு வருகை தருமாறு அவருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். எங்கள் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் இரத்தினபுரிக்கு வரவேண்டும்.

13 ஆவது திருத்தச் சட்டத்துடன் நாங்கள் வட மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு வைப்பதென்பதை நாங்கள் பார்ப்போம் என்று ஞானஸார தேரர் குறிப்பிட்டிருந்தார். 13 ஆவது திருத்தச் சட்டத்தின்கீழ் நாங்கள் வட மாகாண சபைத் தேர்தலை நடாத்துவோம் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இது எங்கள் அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட்டுள்ள விடயம். நாங்கள் அவ்வாறு வட மாகாண சபைத் தேர்தலை நடாத்தினால் தேரர் அவரது காவியுடையை அவர் களைத்துவிடுவாரா? மாகாண சபையை நிலை நிறுத்த முடியாதுவிடின் நான் எனது அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன். நானும் எனது காவியுடையைக் களைவேன், பொது பல சேனா இயக்கத்தைக் களைத்துவிடுவேன் என்று அவரும் என்னைப் போல வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

வாய் இருக்கின்றது என்று வாய்க்கு வருவதையெல்லாம் பேசுவது சரியல்லவே! காவியுடையினுள் மறைந்துதானே அவர் கூக்குரலிடுகிறார். நிந்தனை செய்கின்ற வார்த்தைகளைத்தான் அவர் பேசுகின்றார். என்னாலும் அவ்வாறு கதைக்க முடியும். காவியுடைக்கு நாங்கள் மரியாதை செலுத்துவதால் அவ்வாறு பேசுவதில்லை.

பொதுபல சேனாவுக்கு நோர்வே நன்றாகவே உதவுகின்றது என எனக்குத் தோன்றுகின்றது. நோர்வே தூதுவரும் சாதாரணமாக பொதுபல சேனாவின் விகாரை (பன்சலை) யில்தான் இருக்கிறார் என்றும் அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.

நன்றி : ஸ்ரீலங்கா மிரர் இணையத்தளம்

(தமிழில் : கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com