Monday, June 17, 2013

சிவில் பாதுகாப்பு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்! பிரதி பொலிஸ் மா அதிபர் ஒப்புதல்!! (படங்கள் இணைப்பு)

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேசத்திலேயே கூடுதலான குற்றச் செயல்கள் இடம் பெறுவதாக அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேக்கர கல்முனையில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை முஸ்லிம், தமிழ் சாய்ந்தமருதுபிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் சென்ற வெள்ளிக்கிழமை மாலை கல்முனை திரு இருதயநாதர் மண்டபத்தில் கல்முனை தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. ஏ. கபார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேக்கர பிரதம அதிதியாகவும் கல்முனை பொலிஸ்அத்தியட்சகர் காமினி தென்னக் கோன், கல்முனை தமிழ் முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர்களான கே. லவநாதன், எம்.எம்.நௌபல் சாய்ந்தமருது பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.உதுமாலெவ்வை ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் இஸ்லாம், இந்து, கிறிஸ்தவ, பௌத்த சமயத் தலைவர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். குறித்த பிரதேச செயலகங்களுக்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனைக்குடி, இஸ்லாமாபாத், கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, மணற்சேனை, சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராம சேவை அதிகாரிகளும் சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்களும் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேகர இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது:

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் செயற்பாடுகள் மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்கள் நடை பெறுகின்ற போது சிவில் பாதுகாப்பு குழுவினர் பொலிசாரிடம் முறையிடுகின்றனர், அதேபோன்று அவர்கள் பொலிசாருடன் நட்பும் இரகசிய தொடர்பும் வைத்துள்ளனர். அதே போன்று சிவில் பாதுகாப்பு குழுவினரின் நடவடிக்கைகள் பற்றி பொது மக்களும் பொலிஸாரிடம் முறையிடும் நிலை அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது. அவ்வாறு பொது மக்களால் செய்யப்படுகின்ற முறைப்பாட்டை புலனாய்வு செய்கின்ற போது சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பாரிய குற்றங்கள் செய்வதும்,பாரிய குற்றங்களுக்கு துணைபோவதும் தெரிய வருகின்றது.

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கடமை பொறுப்பு என்னவென்று தெரியாமல் செயல்படுவதனால் இவ்வாறான நிலை ஏற்படுகின்றது. கல்முனை பிரதேசத்தில் 76 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 76 சிவில் பாதுகாப்பு குழுக்கள் இயங்குகின்றன. இவர்களால் பொலிஸ் நடமாடும் சேவைகள்,சிரமதானங்கள்,இரத்த தானங்கள் போண்ற மக்களுக்கு உதவும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேசத்திலேயே குற்றச் செயல்கள் அதிகம் இடம் பெற்றிருப்பதாகவும் கூடுதலான குற்றச் செயல்களுக்காக நீதி மன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேக்கர தெரிவித்தார். கடந்த ஜந்து மாதங்களில் 35 பாரிய குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் 85 பேர் வாகனம் செலுத்தி நீதி மன்றத்தில் தண்டம் செலுத்தியுள்ளனர். அதே போன்று, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் 916 பேர் தண்டம் செலுத்தியுள்ளனர். அதே போன்று பல சிறியளவிலான குற்றங்கள் இடம் பெற்றுள்ளன இவ்வாறு பல குற்றச் செயல்கள் இடம் பெறுமாயின் கல்முனை பிரதேசத்தில் இயங்கும் 76 சிவில் பாதுகாப்புக் குழுக்களினதும் கடமை என்னவாகும் என அவர் கேள்வி எழுப்பினார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல சிவில் பாதுகாப்புக் குழுக்களின் அங்கத்தவர்களையும் பொலிசார் கண்ணியப்படுத்த வேண்டும் அவர்களுக்கும் பொலிசாருக்குமிடையே நெருங்கிய உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணித்துள்ளேன். சிவில் பாது காப்புக் குழுக்கள் ஒரு அமைச்சின் கீழோ அல்லது ஒரு அமைச்சசரின் கீழோ இயங்கவில்லை மாறாக நேரடியாக ஜனாதிபதியின் கீழ் இயங்குகின்றது.

நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மக்கள் அச்சமற்ற சூழலில் வாழ வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதியினால் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எனவே இன்னும் ஐந்து மாதங்களின் பின்னர் இங்கு வருகின்றபோது கல்முனையில் இடம் பெறுகின்ற குற்றச் செயல்கள் நிறுத்தப்படவேண்டும் சிவில் பாதுகாப்பு குழுக்களின் செயற்பாடுகள் முன்னுதாரணமாக அமைய வேண்டும் என அவர் அங்கு தெரிவித்தார்.

அங்கு, சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான அடையாள அடடையும் பிரதி பொலிஸ்மா அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது.

(நற்பிட்டிமுனை நிருபர்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com