ஆடி வேல் விழா இவ்வருடம் ஆவணி வேல் விழா ஆனது எப்படி!
இலங்கையின் வரலாறு தொடங்கிய காலம் முதல் இத்தீவை ஆண்ட மன்னர்களின் போஷிப்பையும் கதிர்காம முருகனாலயம் பெற்றிருந்தமை பற்றி பாளி நூல்கள், வரலாற்று மூலகங்கள், சந்தேச நூல்கள் போன்றவற்றின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
குபேரன், இராவணன், மகாநாகன் பாண்டிய கதிர்காம சத்திரிய மன்னர்கள், தேவநம்பிய தீசன், துட்டகாமினி, 2ஆம் காசியப்பன், 4ஆம் அக்ரபோதி, தம்புலன், 3ஆம் மகிந்தன் சோழ மன்னர்கள், விஜயபாகு, மகா பராக்கிரம பாகு என இலங்கையை ஆட்சிசெய்த பல மன்னர்களின் ஆதரவையும் மானியங்களையும் கதிர்காம முருகனாலயம் பெற்றிருந்தது.
கி.பி.1581 முதல் 1593வரை சீதாவக்கை இராச்சியத்தை ஆட்சி செய்த முதலாம் இராஜசிங்கன் காலத்தில் கதிர்காமத்தில் இருந்த ஆலயங்களை பராமரிக்கும் பொறுப்பு இந்திய சந்நியாசிகளிடம் அரசனால் ஒப்படைக்கப்பட்டது. சில காலத்தின் பின்பு வள்ளியம்மன் ஆலயத்தின் பரிபாலனம் மட்டும் சந்நியாசிகலால் கப்புறாளைகளிடம் கையளிக்கப்பட்டது. அதன்பின்பு கம்புராளைகள் கந்தசுவாமி கோயில், பத்தினியம்மன் கோயில் ஆகியவற்றையும் பஸ்நாயக்க நிலமேயின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர்.
கதிர்காம முருகன் ஆலய வருடாந்த திருவிழாவானது முருகன்வள்ளி திருமண வைபவத்தை சம்பிரதாய பூர்வமாக கூறும் நிகழ்வாகவே அமைகிறது. வைகாசி மாத பௌர்ணமி தினத்தன்று முருகனுக்கு வள்ளியம்மனை திருமணம் செய்து கொடுக்க முதலாதவதாக திருமணப் பேச்சு ஆரம்பமாவதாகவும் அதன்பின்பு 45 நாட்களில் திருமணம் பற்றிய ஏற்பாடுகள், பேச்சுகள், முடிவுகள் என்பன நடைபெற்று 45ஆவது நாள் திருமண வைபவம் ஆரம்பமாகி 15 நாட்களில் கோலாகலமாக நிறைவுறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த அடிப்படையில் திருமணம் பற்றி பேசிய முதல் நாளன்று வள்ளியம்மன் கோயிலிலிருந்து பூஜை செய்யப்பட்ட மரமொன்றைக் கொண்டு வந்து முருகன் கோயிலில் வைப்பதே கன்னிக்கால் நாட்டும் வைபவமாகும்.
இலங்கையில் பல முருகன் கோயில்களில் ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் திருவிழாக்கள் நடைபெறும். மிக முக்கியமாக கதிர்காமம் முருகன் கோயிலில் ஆடிமாதத்திலேயே திருவிழா நடைபெறும். கதிர்காமம் முருகன் ஆலயத்தின் திருவிழா நாட்களை ஒட்டியே பல முக்கியமான முருகனாலயங்களிலும் வருடாந்த திருவிழாக்கள் நடைபெறும்.
சாதாரணமாக எமது ஆலயங்களில் திருவிழாக்கள் ஆரம்பமாகும் தினத்தை நாள், நட்சத்திரம், திதி போன்றவற்றின் அடிப்படையிலேயே கணித்து முடிவு செய்வர். ஆனால், கதிர்காம ஆலய நிர்வாகத்தினர் பௌர்ணமி தினத்தை அடிப்படையாக வைப்பதே திருவிழா ஆரம்பமாகும் திகதியை முடிவு செய்வர். இதற்கு ஓர் முறையும் கையாளப்படுகிறது. அம்முறையானது வைகாசி மாத பௌர்ணமி தினத்திற்கு அடுத்தநாள் கன்னிக்கால் நாட்டி 45ஆவது நாள் திருவிழா ஆரம்பமாகும்.
பின் 15ஆவது நாளில் இறுதி வீதிவலமும், அடுத்தநாள் காலை தீர்த்தோற்சவமும் நடைபெற்று திருவிழா முடிவடையும். அதாவது, ஆடிமாத பௌர்ணமி தினத்தில் திருவிழா முடிவடையும்.
ஆனால், இந்த வருடம் ஆனிமாத பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாள் கன்னிக்கால் நாட்டப்பட்டு அதிலிருந்து 45ஆவது நாளான ஆகஸ்ட் 7ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 21ஆம் திகதி தீர்த்தோற்சவமுணம் நடைபெற இருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இம்முறை திருவிழா ஆவணி மாதம் நடைபெறவுள்ளது. அதாவது, வழமைக்கு மாறாக திருவிழா ஒரு மாதம் தாமதமாகியுள்ளது. இதற்கான காரணம் வைகாசி பௌர்ணமி தினத்தில் கன்னிக்கால் நாட்டுவதற்கு உகந்த நேரம் அமையவில்லை என ஆலயத்தின் பிரதம கப்புறாளை கூறியதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கதிர்காமத்தைப் போலவே ஆடிமாதம் திருவிழாவை நடத்தும் ஏனைய முருகனாலய நிர்வாகத்தினரும் கடும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர்.
1 comments :
வேறென்ன கதிர்காம கோயிலையும் கைப்பற்றத்தான்........
Post a Comment