மீன்பாடும் தேனாட்டின் பெரிய கதிரைக்கு நீயா? நானா?
மீன்பாடும் தேனாடு என வர்ணிகப்படுகின்ற மட்டக்களப்பில் தற்போது மீன் பாடுகின்றதோ.. தேன் ஒடுகின்றதோ என்பது தெரியாது. ஆனால் அம்மாவட்டம் இலங்கையில் வறுமையில் முதலாவது மாவட்டமாக பதிவாகியுள்ளது. இந்த சீத்துவத்தில் அம்மாவட்டத்தின் பெரிய கதிரைக்காக இருவர் முட்டி மோதுகின்றனர் என்பது மாத்திரம் உண்மை.
பெரிய கதிரை என்றால் சிலருக்கு விளங்கியிருக்கும் , சிலருக்கு இருக்காது. அதாவது இலங்கையின் இருபத்தைந்து நிர்வாக மாவட்டங்கள் உண்டு. இந்த இருபத்தைந்து மாவட்டங்களுக்கும் 25 கதிரைகள். இதுதான் மாவட்டத்தின் பெரிய கதிரை. அதாவது அரசாங்க அதிபர் கதிரை. வவுனியா மாவட்டத்திற்கான கதிரையில் குந்தியிருந்த அம்மையார் தற்போது மட்டக்களப்பு கதிரையில் குந்தவைக்கப்பட்டுள்ளார். இந்த அம்மாவை இழுத்து விழுத்தி கதிரையில் குந்த படாதபாடு படுகின்றார் அம்மாவுக்கு அடுத்த கதிரையில் இருக்கின்ற பாஸ்கரன்.
ஜனாவின் ஒன்றுவிட்ட சகோதரனான இவர் எவ்வாறு நிர்வாக சேவையில் இணைந்தார் என்பது சுவாரசியமான கதை. இலங்கையிலே இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்தபோது, இணைந்த வட கிழக்கின் மாகாண சபை ஈபிஆர்எல்எப், ரெலோ, ஈஎன்டிஎல்எப் என்ற மூன்று கட்சிகளின் கூட்;;டான த்றீ ஸ்ராரின் கையிலிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரெலோ அமைப்பு சார்பாக பாராளுமன்றுக்கு தெரிவாகியிருந்தார் ஜனா. அன்றைய ஜனாதிபதியாக இருந்த பிறேமதாஸவிற்கு நெருக்கமாகவும் இருந்தார். இக்காலகட்டத்தில் நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்புக்கான பரீட்சை இடம்பெற்றது, தனது அண்ணாச்சி பரீட்சை எழுதுகின்றார் என்பதற்காக பரீட்சாத்திகள் அனைவரையும் சேவைக்கு உள்வாங்குமாறு பிறேமதாசவிடம் வேண்டினார் ஜனா. யாவரும் நிர்வாக சேவையில் இணைக்கப்பட்டனர். (இவ்வளவுதான் கதை அண்ணாச்சி சோதினை பாஸ்பண்ணவில்லை என்று நேரடியாக சொலவது நாகரிகம் இல்லை பாருங்கோ)
இலங்கை நிர்வாக சேவைக்கு பின்வழியால் நுழைந்த இவர் சென்ற இடங்களெல்லாம் மக்களுக்கு தலையிடியாகவே இருந்துள்ளார். காலத்திற்கு காலம் மாறி மாறி வருகின்ற இயக்ககாரன்களுக்கு எடுபிடியாக தன்னை மாற்றிக்கொண்ட இவர் தொடர்ந்து மக்கள் தலையில் மிளகு அரைத்தே வந்துள்ளார்.
இவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக செயலாளராக இருந்தபோது, மக்கள் இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். உடனடி இடமாற்றம் கிடைக்கப்பெற்றது. கருணாவின் மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதுடன் கருணாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக மாறினார்.
மட்டக்களப்பு கச்சேரிக்கு மேலதிக அரசாங்க அதிபராக பாஸ்கரனை அழைத்துவந்த முரளிதரன் இவர் எனது அப்பன் வழி உறவினர் என்றாராம். மட்டக்களப்பு அரசாங்க அதிபராக வருவதற்கு விநாயமூர்த்தியின் உறவினராக இருக்கவேண்டும் என எந்த வர்த்தமானி ஊடாக கோரப்பட்டுள்ளது?
மட்டக்களப்பில் நிர்வாக சேவையில் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை தனது ஆட்களை நியமிப்பதன் ஊடாக தனது அரசியல் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ளலாம் என நினைக்கின்றார் கருணா. முன்னாள் அம்மானின் இந்த முயற்சி திருவினையாகாது என்பதை கட்டியம் கூறிவைக்க விரும்புகின்றேன்.
ஒரு பிரதேச செயலகத்தை நிர்வகிக்க முடியாதவர் அல்லது அங்கு கொள்ளையடித்தார் என்று குற்றச்சாட்டில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட நபர் ஒருவரை அதே மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களுக்கும் பிரதானியாக நியமிக்க கருணா மேற்கொள்ளும் முயற்சியானது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
இதில் சுவாரசியமான விடயம் யாதெனில் கருணாவும் ஜனாவும் ஒரு காலத்தில் பரம எதிரிகள். ஜனாவை கொல்வதற்கு கருணாவும் , கருணாவை கொல்வதற்கு ஜனாவும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தவர்கள். இன்று ஜனா கருணாவினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கதிரை பிச்சை வாங்கியுள்ளார். இவர்கள் அரசுக்கு எதிராக வார்த்தைகளை சரமாரியாக பொழிந்தாலும், தங்களது விடயங்களை சாதித்துக்கொள்வதற்காக அரசுடனும் அதன் பங்காளிகளுடனும் உறவாளிகளாகவே இருக்கின்றனர் என்பது பாஸ்கரன் விடயத்தில் புரிகின்றது. தனது அண்ணாச்சியை பிறேமதாசவின் உதவியுடன் நிர்வாக சேவையில் இணைத்தார். தற்போது கருணாவின் கருணையில் மாவட்ட அரச அதிபராக்க முயற்சிக்கின்றார்.
இதில் இறுதியாக தோல்வியடையப்போபவர் கருணா என்பது கவலைக்குரிய விடயம். பாஸ்கரன் கதிரையை பிடிப்பதற்காக கருணாவின் காலடியில் கிடந்தாலும் கதிரையை பிடித்த பின்னர் அண்ணன் தம்பி உறவு , நிர்வாக சேவையினுள் நுழைத்த நன்றிக்கடன் என ஏகப்பட்ட கடமைகள் இருக்கும்போது கருணா கைவிடப்படலாம்..
கருணாவின் விசுவாசி எனச் சொல்லப்படுகின்ற பாஸ்கரனுக்காக பொன் செல்வராசா வக்காலத்து வாங்கிய பதிவொன்றும் மக்கள் அறியவேண்டியது. மட்டக்களப்பு கச்சேரியின் முக்கிய அதிகாரி ஒருவரை சந்தித்த பொன்செல்வராசா „பாஸ்கரனுக்கான கடமைகள் அரச அதிபரினால் பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளதேன்' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அவ்வாறாயில் பாஸ்கரன் கருணாவின் விசுவாசியா அன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உளவாளியா? இந்த நிலைகளை பார்க்கின்றபோது, பாஸ்கரன் அரச அதிபராக நியமிக்கப்பட்டால் மட்டக்களப்பு கச்சேரி கட்சிக்கிளைகளின் கட்டிடத்தொகுதியாக மாறும். அதாவது அங்குள்ள ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு கட்சிகிளைகளின் அலுவலகங்களாக மாறும்.
எனவே இத்தனை அரசியல் கட்சிகளுடனும் பின்னிப்பிணைந்திருக்கின்ற ஒரு நபரால் மக்களுக்கு சுயாதீனமாக சேவையாற்ற முடியுமா? அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதிகள். அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்குமான உறவு இன்றியமையாததுதான். ஆனால் அதற்கென்ற ஒரு வரையறை உண்டு. கட்டுப்பாடு உண்டு. உயர் பதவி ஒன்றில் அமர்ந்திருந்துகொண்டு உத்தியோகபூர்வ வாகனத்தை சட்டத்திற்கு புறம்பாக எடுத்துச்சென்று அரசியல்வாதிகளுடன் குடித்து கும்மாளம் அடித்துவிட்டு ஊரவனின் மதிலில் மோதியிருகின்றார் பாஸ்கரன். இவ்வாறான ஒருவரின் கையில் மாவட்ட நிர்வாகம் சென்றால் மாவட்டத்தில் கட்டிடத்தொழிலாளிகன் தேவை அதிகரிக்குமே தவிர வேறு முன்னேற்றம் ஏற்படும் என்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை.
இலங்கையிலே அரச சேவையில் இருக்கின்ற அத்தனை பேரும் இலங்கை குடிமக்களின் வேலையாட்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். அரசாங்கங்களை மக்கள் தெரிவு செய்கின்றார்கள். அரசாங்கங்கள் உங்களை மக்களின் வேலையாட்களாகவே அமர்த்துகின்றார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் யாசிகன் ஒருவனுக்கும் கூலியாள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். யாசிகன் ஒருவன் ஒரு சீனிப்பக்கட்டை வாங்கும்போது அதற்கான வரியினை செலுத்துகின்றான். அந்த வரிப்பணத்தில்தான் உங்களது பிள்ளை நாளாந்தம் உணவுண்ணுகின்றது என்பது மறுக்க முடியாதது. இவ்வாறு இருக்கும்போது மக்களுக்கு சொந்தமான வாகனத்தை கொண்டுபோய் மோதுவது மன்னிக்கமுடியாதது. இதற்கு விளக்கம் கோரப்பட்டபோது பாஸ்கரன் நடந்து கொண்ட விதம் வியப்புக்குரியது. (மேலும் ஆழமாகச் செல்ல விரும்பவில்லை நிறுத்துகின்றேன்)
இறுதியாக கதிரைக்காக ஒருவனை ஒருவன் இழுத்து வீழ்த்துவது ஒன்றும் இலங்கை தமிழர் வரலாற்றில் புதிது அல்ல. முதலாம் இரண்டாம் கதிரைகளுக்கிடையில் தொடர் பனிப்போர்தான். தமிழர்களுக்கெல்லாம் தந்தை எனப்படுகின்ற செல்வநாயகம் தொடக்கம் இறுதியில் முள்ளிவாய்காலில் மண்டையில் கொத்துவாங்கின தேசியத் தலைவர் எனச் சொல்லப்பட்ட பிரபாகரன் வரை நிகழ்ந்த கதைதான். முன்னுக்கு இருக்கின்றவர்களை போட்டுத்தள்ளிவிட்டு கதிரையில் குந்தியதும், பின்னுக்கிருக்கிறவன் கதிரையை பார்க்கின்றான் எனக்கு ஆப்பு வைத்து விடுவானோ என்ற சந்தேகத்தில் போட்டுத்தள்ளியதும் நாம் அடிக்கடி கேள்விப்பட்ட கதைகள்தான்.
அது அரசியல் சாக்கடையில் நடந்தவை. மக்களின் வரியில் சம்பளம் வாங்குகின்றவர்கள், சட்டத்தை ஒழுங்கை நடைமுறைப்படுத்தவேண்டியவர்கள் நீதிக்கு புறம்பாக செயல்பட்டு கதிரை பிடிக்க முற்படுவது நியாயமா? என்ற நியாயமான கேள்வி உங்களிடம் எழலாம். ஆனால் நேர்வழியில் வந்தவர்களிடம் நீங்கள் மேற்கண்ட கேள்வியை கேட்கலாம். குறுக்கு வழியில் வந்தவர்கள் நேர்மையாக சட்டத்தையும் ஒழுங்கையும் கடைப்பிடிப்பார்கள், அதை நடைமுறைப்படுத்துவார்கள் என்றும் இவர்களிடம் நீதி, நேர்மை, கடமை , கன்னியம் , கட்டுப்பாடு என்பன இருக்கும் என்று எதிர்பார்ப்பது எத்தனை முட்டாள்தனமானது.
0 comments :
Post a Comment