அமெரிக்காவை ஆள்வது யார்? Barry Grey
அமெரிக்க மக்களை உளவுபார்க்கும் இரகசிய அராசங்கத் திட்டங்களை ஜனாதிபதி பாரக் ஒபாமா ஆதரிப்பதை தொடர்ந்து, தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பரிடம் இருந்து பாரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் பற்றித் தகவல் கசியவிடுவோர் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்னும் அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் கிளாப்பர் பென்டகனை தளமாகக்கொண்ட தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் (NSA) திட்டங்களை “பொறுப்பற்ற முறையில் அம்பலப்படுத்தியதற்காக” பிரித்தானியாவின் கார்டியனையும், வாஷிங்டன் போஸ்ட்டையும் கண்டித்தார். இத்திட்டங்கள் அன்றாட வாடிக்கையாக கிட்டத்தட்ட ஒவ்வொரு அமெரிக்கருடைய தொலைப்பேசிச் சான்றுகளையும் மற்றும் மில்லியன் கணக்கான இணைய தள தகவல்கள் மின்னஞ்சல்கள், உரையாடல்கள், ஒளிப்பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் கடன் அட்டை பற்றுச்சீட்டுக்களையும் சேகரிக்கின்றன.
நீதித்துறை மற்றும் FBI அதிகாரிகள் அரசாங்கம் கசிவுகள் குறித்து குற்ற விசாரணைகளை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது எனக் கூறியதாக ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டுள்ளது. ஒபாமா நிர்வாகத்தைப் பொறுத்தவரை, அப்பட்டமாக அரசியலமைப்புக்கு மாறானவகையில் அமெரிக்க மக்களுடைய அந்தரங்க உரிமைகளை மீறியது குற்றம் அல்ல, மாறாக இவற்றைப் பற்றி பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தியதுதான் அத்துமீறலாகும்.
கடந்த வெள்ளியன்று NSA திட்டத்தை ஆதரித்து வந்த ஒபாமாவின் கருத்துக்கள், செய்தி ஊடகத் தகவல்களை அவர் “பரபரப்பானவை” எனக்கூறி, மக்களை அரசு கண்காணிப்பது என்பது உரிமைகள் பற்றிய சட்டத்தை “மிதமான ஊடுருவல்” என்று கூறுவது ஜனநாயக உரிமைகள் பற்றிய எவ்விதமான கருத்தையும் முற்றிலும் கைவிடுவதைத்தான் குறிக்கிறது என்றார். இப்படி முன்னாள் அரசியலமைப்புச் சட்டத்தின் பேராசிரியர், அமெரிக்கா நிறுவப்பட்ட அரசியலமைப்பின் அடிப்படையுடன் எந்த தீவிர தொடர்பும் இல்லாத ஆளும் வர்க்கத்தின் பார்வையைத்தான் கூறுகிறார்.
அமெரிக்க குடிமக்களும் உள்ளடங்கலாக உலகில் உள்ள மக்கள் மீதும் நீதிக்கு புறம்பாக ஒருதலைப்பட்சமாக படுகொலை செய்ய ஆணையிடும் உரிமையை ஜனாதிபதியாக கொண்ட நாட்டிற்கு ஒபாமா தலைமை தாங்குகிறார். பொஸ்டன் போன்று முழு நகரங்களும், நடைமுறையில் இராணுவச் சட்டத்தின் கீழ் இருத்தப்படுகிறது. அரசாங்கம் செய்தியாளர்களின் தொலைப்பேசி சான்றுகளையும் மின்னஞ்சல்களையும் பற்றி எடுத்துக் கொள்கிறது. இந்நாட்டில் அமெரிக்கப் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் படையினரான பிராட்லி மானிங் போன்றோர் சித்தரவதை செய்யப்பட்டு குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர். இங்கு ஜனாதிபதி பயங்கரவாதிகள் எனக் கூறப்படுவோரை காலவரையின்றி, விசாரணையின்றி இராணுவச் சிறைகளில் தள்ளுமாறு உத்தரவிடமுடியும்.
இந்நிகழ்வுகள் எழுப்பும் வினா இதுதான்: அமெரிக்காவை யார் ஆள்வது?
தான் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ள அரசியலமைப்பை தானே மீறுவதை பாதுகாப்பதற்கு காங்கிரஸிடம் ஆலோசனை கேட்கப்பட்டது, அது ஒப்புதல் கொடுத்துள்ளது என்று ஒபாமா கூறுகிறார். அது உண்மைதான். நீதிமன்றங்கள் அளித்துள்ள ஒப்புதலைப் பற்றியும் அவர் துல்லியமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆயினும்கூட, அமெரிக்க மக்களிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை, பொய்கூறப்பட்டு, அவர்களுடைய ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவது குறித்து அறியாநிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். “முதலாளித்துவ ஜனநாயகம்” என்னும் சொற்றொடர்கூட மக்களின் இறைமைக்கு வெறும் கந்தலான பொறிகளாகி ஒரு அரசியல் அமைப்புமுறைக்கு ஒவ்வாததாகி, அரசியல் வாழ்வின் யதார்த்தங்களால் முற்றிலும் முரணானதாகிவிட்டது.
இராணுவம், உளவுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் பெரும் நிறுவனங்கள் அமெரிக்க மக்கள் மீது திட்டமிட்ட, சட்டவிரோத கண்காணிப்பு நடத்துவதற்கு இரகசியமாகக் கொடுக்கும் ஒத்துழைப்பு அமெரிக்க நாட்டின் உண்மை அதிகாரம் செலுத்துவோரை வெளிப்படுத்துகிறது. AT&T, Verizon, Sprint போன்ற மாபெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் இணைய தள நிறுவனங்களான கூகிள், மைக்ரோஸாப்ட், பேஸ்புக், டிவிட்டர் ஆகியவை அரசாங்க அமைப்புக்களான இராணுவத்திற்கும் FBI, CIA இற்கும் அவை சட்டபூர்வமாக பெற்றிராத உரிமையான நூற்றுக்கணக்கான மக்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள இடமளித்துள்ளன.
காங்கிரஸும் இரண்டு பிரதான கட்சிகளும், உண்மையில் நாட்டை நடத்தும் இராணுவம், உளவுத்துறை அமைப்பு மற்றும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு இரப்பர் முத்திரை போல் பணியாற்றுகின்றன. “நான்காம் பிரிவு” என அழைக்கப்படும் செய்தி ஊடகம் வெட்கமின்றி இந்த ஆளும் முக்கூட்டின் கைகளாக செயல்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக காங்கிரசின் கோழைத்தனமும் மோசடியும், ஜனாநாயகக் கட்சியினர் செய்தி ஊடகத்தின் தாழ்ந்து நிற்கும் நிலையும், NSA ஒற்றுக்கேட்டல் திட்டங்கள் அம்பலப்படுத்தியதை அவர்கள் எதிர்கொண்ட விதமும், இராணுவ, உளவுத்துறை பிரிவுகளுக்கு தங்கள் சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலில் இன்னும் ஈடுபட ஊக்கம் கொடுக்கிறது. ஒற்றுத்திட்டங்களை மிகவும் “துணிச்சலாக” குறைகூறுபவர் எனக் கூறப்படும் ஜனநாயக செனட்டர் மார்க் உடால் ஞாயிறன்று CNN “நாட்டின் உடைய” நிலைமை பேட்டியை ஆரம்பிக்கையில், தன்னுடைய ஆதரவு “பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு” உண்டு என உறுதியளித்து ஆரம்பித்து இரகசியத் தகவல்களை கசிய விடுபவர்களை கண்டித்தார்.
ஒரு பெரிய செய்தித்தாளோ செய்தி ஊடகமோ ஒற்றுக்கேட்டலுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் எனக் கோராததுடன், NSA மூடப்பட வேண்டும் எனக் கோரவில்லை, சட்டவிரோத ஒற்றுக்கு பொறுப்புக் கொண்ட அதிகாரிகள் குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரவில்லை அல்லது நிக்சன் நடத்திய அனைத்தையும் கடந்து நிற்கும் அரசியலமைப்பு மீறலை செய்துள்ள ஒபாமாவிற்கு எதிராக பெரும் குற்றங்கள், தவறுகளுக்காக பதவிவிலகல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறவில்லை. நியூ யோர்க் டைம்ஸ் சனிக்கிழமை அன்று முதல் பக்கக் கட்டுரையை “தகவல் சேகரிப்பு பயங்கரவாதத்துடன் போரிட மிகவும் முக்கியம்” என்ற தலைப்பில் வெளியிட்டது. இக்கட்டுரை பல முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் NSA கண்காணிப்பு திட்டங்களை வெட்கமின்றி ஆதரித்துள்ளதை காட்டுகிறது.
ஒபாமா நிர்வாகமே, முந்தைய எந்த அமெரிக்க நிர்வாகத்தையும் விட, நிதிய உயரடுக்குடன கூட்டு வைத்துக் கொண்டு இராணுவமும் CIA உம் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதை உருவகப்படுத்திக் கொண்டுள்ளது. 1961 இல் ஐசனோவர் “இராணுவ-தொழில்துறை இணைப்பு” என அழைத்த எப்பொழுதும் பெருகும் அதிகாரம், ஒபாமாவின் கீழ் நிறைவேற்று அதிகார பிரிவு தேசிய பாதுகாப்புக் கருவியுடன் இணைவதில் ஒரு உறுதியான நிறைவை கண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிப்போக்கிற்கு ஒபாமாவின் தனிப்பட்ட பின்னணி அவரைச் சிறந்த வாகனமாக செயற்படச் செய்துள்ளது. பட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளியேறியபின் அவர் ஓராண்டு Business International இல் பணிபுரிந்தார்; அதன் நிறுவனர் CIA முகவர்களுக்கு பல நாடுகளில் பாதுகாப்பு கொடுத்துள்ளதை ஒப்புக் கொண்டார்.
எவ்வாறாயினும், ஒபாமாவின் தனிப்பட்ட வாழ்க்கையை அமெரிக்காவில் சர்வாதிகார வகைகளாக வெளிப்படுவதற்கு காரணமாகவுள்ள இன்னும் அடிப்படையான சமூக நிகழ்வுப்போக்குகளிலிருந்து பிரித்து பார்க்கக்கூடாது. எவரும் இன்று “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது எப்பொழுதும் அமெரிக்க மக்கள் மீதாக இருந்து வருகின்றது, வந்தது, என்பதைத் தீவிரமாக மறுக்க முடியாததுடன், சர்வதேச அளவில் ஏகாதிபத்திய போருக்கும் அமெரிக்காவிற்குள் ஜனநாயக உரிமைகள் மீது இடையறா தாக்குதல்களுக்கும் ஒரு மறைப்பாகவும் உள்ளது.
நாட்டில் இருக்கும் ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தையை இலக்கு கொள்ளும் ஒற்றுக் கேட்டலின் பாரிய அளவானது இந்த வினாவை எழுப்புகிறது. இவர்கள் எதற்குப் பயப்படுகிறார்கள்?
தான் சமூக, அரசியல் அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்ற உணர்வில் ஆளும் வர்க்கம் பேயினால் வட்டமிடுதலுக்கு உட்பட்டது போல் உள்ளது. ஏனெனில் அது மக்கள் ஆதரவு இல்லாத கொள்கைகளை தொடர்கிறது. முதலாளித்துவ முறையின் நெருக்கடியால் உந்தப்பெற்ற நிலையில் பெரும்பாலான மக்களின் நிலைமை மீது தாக்குதலை அது அதிகரிக்கையில் பெருநிறுவன-நிதிய உயரடுக்கு நெருக்கடியின் விளைவுகளால் தானும் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறது. அது கட்டியிருக்கும் சீட்டுக் கட்டு வீடு எந்த கணமும் உடையலாம் என்பதையும் மற்றும் இது புரட்சிகர சமூக எழுச்சிகளை தூண்டலாம் என்பதையும் நன்கு அறியும்.
ஆனால் ஆளும் வர்க்கம் இறுதியில் ஒரேயொரு விடையைத்தான் இச்சிக்கலுக்கு கொண்டுள்ளது. அதாவது வன்முறையை பயன்படுத்தி அடக்குதலாகும். எனவே அரசு அதிக பொலிஸ் அதிகாரங்களுடன் தவிர்க்க முடியாமல் கட்டமைக்கப்படுகின்றது. இவை பயங்கரவாதிகளுக்கு எதிராக அல்ல, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக.
அரசியல் அமைப்புமுறையின் எந்தப் பிரிவும் அல்லது எந்த உத்தியோகபூர்வ நிறுவனமும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்த்துப் போராடப்போவதில்லை.
ஜனநாயகக் கட்சியும் இடது “தாராளவாத பிரிவு” எனப்படுவதும் ஜனநாயக உரிமைகள் குறித்து தங்களுக்கு தீவிர ஈடுபாடு இல்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்திவிட்டன. இவர்களுடன் நேஷன் ஏடு, சர்வதேச சோசலிச அமைப்பு போன்றவற்றால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இடது தாராள மற்றும் போலி இடது சக்திகளும் சேர்ந்துள்ளனர். இவை ஒபாமாவின் பிற்போக்குத்தன மற்றும் ஜனநாயக விரோதக் கொள்கைகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது குறித்து பெரிதும் மௌனம் சாதிக்கின்றன. உண்மையில் வலதுசாரிக் குழுக்களான இந்த “இடது” எனக்கூறிக் கொள்பவற்றின் ஆதரவு ஒபாமாவிற்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இல்லை என்றால், அரசாங்கத்தினால் ஜனநாயக உரிமைகள் மீது இத்தகைய நீண்டகால விளைவுடைய தாக்குதல்களை நடத்துவது முடியாத காரியமாகும்.
ஆனால் இந்த உரிமைகள் தொழிலாள வர்க்கத்துள் வெளிப்படுத்தப்படுகின்றன. அவை புரட்சிகரப் போராட்டங்கள் மூலம் சாதிக்கப்பட்டவை. ஆளும் வர்க்கம் இன்று இவற்றை அழிக்க உறுதி கொண்டுள்ளது என்னும் உண்மை அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் வரலாற்று திவால் தன்மையின் வெளிப்பாடாகும். இந்த உரிமைகளைப் பாதுகாத்தல் என்பது இப்பொழுது தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் வந்துள்ளது. இதற்கு தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் சுயாதீன அரசியல் இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கான போராட்டமானது முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ அரசுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்கப்பட முடியாதது. இப்போராட்டத்தின் திறவுகோல் சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் புதிய தலைமையாக கட்டியமைப்பதுதான்.
0 comments :
Post a Comment