Monday, June 3, 2013

பிரிட்டிஷ் தமிழ் தம்பதியர் கடத்தல் சம்பவத்தில் 9 பேர் கைது

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழ் வர்த்தகரையும் அவரது மனைவியையும் சென்னை விமான நிலையத்திலிருந்து கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ் அகதிகள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட வர்த்தகப் பிரமுகர் தவராஜாவும் அவரது மனைவி சலஜாவும் சென்னை போலீசாரால் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

தவராஜாவும் அவர் மனைவியும் கடந்த மே 29ஆம் திகதி கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தபோது, அவர்கள் தங்கவிருந்த நட்சத்திர ஓட்டலிலிருந்து வருவதாகக் கூறி இருவர் அவர்களை சந்தித்து காரில் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
செல்லும்வழியில் வேறிருவர் வாகனத்தில் ஏறிக்கொண்டபோது, தம்பதியருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அப்போது அவர்கள் முன்பதிவு செய்திருந்த ஓட்டல் நிர்வாகத்தினர் தொடர்புகொண்டு ஏன் அவர்கள் அனுப்பிய காரைப் பயன்படுத்தவில்லை எனக்கேட்ட போதுதான், தாங்கள் கடத்தப்படுவதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

ஆனால் அவர்களால் ஏதும் செய்ய இயலவில்லை. அவர்கள் புதுச்சேரி அருகே உள்ள மந்தாரக்குப்பத்தில் அடைத்துவைக்கப்பட்டனர்.
அதே நேரம் இலண்டனில் உள்ள அவர்களது மகளிடம் யாரோ ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 5 லட்சம் பவுண்ட் அனுப்பிவைக்காவிட்டால் அவரது பெற்றோர் கொல்லப்படுவர் என மிரட்டியிருக்கிறார்.

தொடர்ந்து கடத்தல்காரர்கள் அப்பெண்ணிடம் பேச, எங்கிருந்து அவ்வழைப்பு வருகிறது என்பதைக் கண்காணித்த பிரிட்டிஷ் போலீசார் மந்தாரக்குப்பம் வீட்டைக் கண்டறிந்ததாகவும், ஆனால் பெரிதாக மோதல் எதுவுமில்லாமல் தவராஜா தம்பதியினர் நேற்று ஞாயிற்றுக்கிமை மீட்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று திங்கள் செய்தியாளர்களைச் சந்தித்த தவராஜாவும் அவரது மனைவியும் தாங்கள் துன்புறுத்தப்படவில்லையென்றும் ஆனால் தொடர்ந்து பயமுறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

நன்றி பிபிசி

No comments:

Post a Comment