24 மணித்தியாலத்திற்குள் 32 இலட்சம் ரூபாவிற்கு தொலைபேசியில் உரையாடிய நபர்! தொலைபேசி கட்டணம் செலுத்த மறுப்பு!
கண்டி, திகனை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், கையடக்க தொலைபேசி கட்டணமாக 32 இலட்சம் ரூபாவை செலுத்த தவறியமை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
குறித்த நபருக்கு எதிராக தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் நிறுவனமொன்று வழக்கு தாக்கல் செய்த வழக்கில், குறித்த நபர் தனது சிம் அட்டைக்கு ரோமிங் வசதியை பெற்று 24 மணித்தியாலத்திற்குள் 32 இலட்சம் ரூபாவிற்கு தொலைபேசியில் பேசியுள்ளதாகவும் அதற்குரிய கட்டணமாக 32 இலட்சம் ரூபாவை செலுத்த தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 24 மணிநேர காலப்பகுதிக்குள் 501 அழைப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது. எனினும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர் தனது சிம் அட்டையை இத்தாலியிலுள்ள உறவினருக்கு கொடுத்து விட்டதாகவும், குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர் சிம் அட்டையை ஒருபோதும் பயன்படுத்தவில்லையெனவும் அவர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஒருவர் தனது பெயரில் பெற்றுக்கொண்ட சிம் அட்டையை கைமாற்ற முடியாது என தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இதேவேளை சந்தேக நபருக்கு எதிராக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு ஊழல் மோசடி தடுப்பு பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment