கல்முனை சேனைக்குடியிருப்பு ஸ்ரீ கம்ப காமாட்சி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் 15 திகதி ஆரம்பம்! - யு.எம்.இஸ்ஹாக்
கல்முனை சேனைக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ கம்ப காமாட்சி அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ மகாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா சனிக்கிழமை (15) அதிகாலை விநாயகர் வழிபாட்டுடன் கர்மாரம்பம் புண்ணியாகவாசத்துடன் கிரியைகள் ஆரம்பமாக உள்ளது.
உண்மை அறிவும் இன்பமுமேயாக உருக்கொண்டு அண்டசராசரமெங்கும் பாலில் நெய் போலக் கலந்து உறைகின்ற அம்பாள் ஆன்மாக்கள் தன்னைச் சிந்தித்து வாழ்த்தி வணங்குதற்பொருட்டு எண்ணற்ற திருமேனிகளைக் கொண்டு எழுந்தருளியிருக்கும் அருள் நிலையங்களே ஆலயங்களாகும்.
இந்த பெருமை பொருந்திய ஆலயங்கள் அனேகம் நிறைந்தும் சிவபூமி என திரு மூலரால் சிறப்பிக்கப்பட்டதும், புண்ணிய தலங்கள் தீர்த்தங்கள் நிறைந்ததுமாகிய இலங்காபுரியின் கிழக்கே கல்முனை மாநகரின் மேற்றிசையில் சேனைக் குடியிருப்பு எனும் புண்ணிய பதியில் காஞ்சி மாநகரின் அதிபதியாக செங்கோலோச்சுகின்ற ஸ்ரீ காமாட்சி அன்னையானவள் ஸ்ரீகம்பகாமாட்சி எனும் திவ்ய நாமத்தோடு கோயில் கொண்டு உறைகின்றாள்.
அன்னையவளுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நிகழும் விஜய வருடம் சுபமுகூர்த்த வேளையில் ஆனித் திங்கள் 05ம் நாள் புதன் கிழமை ஏகதாசி திதியும் சித்திரை நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய மு.ப 10.40 முதல் 11.48மணி வரையுள்ள சிம்மலக்கின சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேக திருக்குட முழுக்குப் பெருஞ் சாந்தி விழா இடம்பெற அன்னை அருள்பாலித்துள்ளார்.
மஹா கும்பாபிஷேக கிரியைகளாக ஆனித்திங்கள் முதலாம் நாள் விநாயகர் வழிபாடு,கரமாரம்பம்,புண்ணியாகவாசனம்,ஸ்தலசுத்தி, பிரதிஸ்டா மஹாசங்கல்ப்பம், தேவ சிவாச்சாரியார் அனுஞ்ஞைகுபேரலக்ஷ்மி பூசை ,த்ரவ்யசுத்தி,த்ரவ்ய யாகம்,மகாகணபதி ஹோமம்,பேரிதாடனம்,ம்ருத்ஞ்ஜ ஹோமம்,சாந்தி ஹோமம்,மூர்த்தி ஹோமம், திசாஹோமம், யந்திர பூசை, பிரசாதம் என்பன இடம் பெற்று மாலை வழிபாடுகளும் இடம் பெறும்.
தொடர்ந்து நான்கு நாட்கள் காலை மாலை கிரியைகள் நடை பெற்று ஐந்தாம் நாள் ஆனித்திங்கள் புதன் கிழமை காலை 7.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் யாகபூசை பிரதட்சணம் தீபாரதனை பாராயணம் நாதகீதாஞ்சலி இடம் பெற்று 10.45க்கு ஸ்தூபி அபிஷேகம் செய்யப்பட்டு 11.00 மணிக்கு ஸ்ரீகம்பகாமாட்சி அம்பாளுக்கும் பரிவார முர்த்திகளுக்கும் மஹாகும்பாபிசேகம் தேவ பூசை கும்பாபிசேக பல சமர்ப்பணம் நடந்தேறி மஹா அபிசேகத்துடன் விசேட பூசை பிரசாதம் வழங்கலுடன் கிரியைகள் நிறைவு பெறும்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 11 நாட்கள் மணடலாபிஷேகம் இடம்பெற்று 01.07.2013 அன்று 1008 சங்காபிசேகமும் இடம் பெறவுள்ளது. அருட் கவியரசு விஸ்வப் பிரம்மம் வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் ஜயா அவர்களின் குருவருள் நிறைந்த நல்லாசியுடன் தாழங்குடா நிஷப்தம் ஸ்ரீ மஹாவிஸ்ணு தேவஸ்தான சரீரம் சைவ நன்மணி கிரியாஜோதி தற்புருஷ சிவச்சாரியார் சிவஸ்ரீ வே.கு.கருணாகரக் குருக்கள் தலைமையில் ஆலய கிரயைகள் இடம் பெறவுள்ளது. கிரியைகளின் போது மங்கள வாத்தியம் கல்லடி லயஞானசுடர் பிறேம்குமார் குழுவினரால் இசைக்கப்படவுள்ளது.
0 comments :
Post a Comment