Wednesday, June 26, 2013

13 ஆவது சட்டம் தொடர்பில் சப்ரகமுவ மாகாண சபை மேற்கொண்ட வாக்கெடுப்பு 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் மாகாண சபை பட்டியலில் சில அம்சங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்போது, சகல மாகாண சபைகளின் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு, பெரும்பான்மை மாகாண சபைகளின் இணக்கம் போதுமானதாகுமென குறிப்பிட்டு, இரண்டு அவசர யோசனைகள், சப்ரகமுவ மாகாண சபையில் நிறைவேறியது.

சப்ரகமுவ மாகாண சபையின் மாதாந்த கூட்டம் நேற்று சபை பிரதித் தலைவர் துஷ்மந்த மித்ரபாலவின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தினால் அவசரமாக சபைக்கு கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமான பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.

இதன் போது, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையில் விவாதம் இடம்பெற்றது. மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் 13ஆவது திருத்திச்சட்ட பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் கூறியதாவது,

1988 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தில், மாகாண சபைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாண சபைகளை இணைப்பதே முதல் நோக்கமாகும் என்று அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 30 வருட காலமாக நாட்டில் இருந்த யுத்தத்தை முறியடித்து தற்போது நாடு அபிவிருத்தியடைந்துவரும் வேளையில், மாகாண சபைகள் மூலம் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளும் போது மாகாண சபைகள் அனைத்தும் இணைவதன் மூலம் சரியான தீர்மானங்கள் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி, உறுப்பினர் நிஹால் பாருக் உரையாற்றுகையில், மாகாண சபைகளுக்கு மேலும் அதிகாரங்களை கூட்ட வேண்டும் என்றார். இதனையடுத்து மாகாண சபை உறுப்பினர்கள் இப்ளார், சிறிபாலகிரியெல்ல உட்பட ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.

ஐ.தே.க. எதிர்கட்சி தலைவர் துஷித்தா விஜேமான உரையாற்றுகையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கொண்டுவருவதன் மூலம் அரசாங்கம் பல்வேறு பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும். இந்த நாட்டில் மாகாண சபைகள் பல்வேறு அபிவிருத்திட்டங்களை செய்து வருகின்றது. எனவே அதை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம் என்றார்.

மேற்படி விவாதத்தின் இறுதியில் சபைத் தலைவரால் வாக்கெடுப்பு இடம்பெற்றது இதில் ஐ.தே. கட்சியை சேர்ந்த 9 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்த போதும், மேலதி 17 வாக்குகளால் ஆளும் கட்சி உறுப்பினர்களால் ஆதரவு தெரிவித்து நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாகாண சபைகள் அல்லது பல மாகாணசபைகள் ஒன்றிணைக்கப்பட்டால், மாகாண சபைகளை அமைக்கும் அடிப்படை நோக்கம் நிறைவேற்றப்படுவதில்லை. அத்துடன் மாகாண சபை விடயங்களில் சகல மாகாண சபைகளின் விருப்பமின்றி, பெரும்பான்மை விருப்பம் போதுமானதாகுமென, இடம்பெற்ற விவாதத்தில் கருத்து தெரிவித்த, சப்ரகமுவ மாகாண சபையின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதுடன், 17 மேலதிக வாக்குகளினால் இப்பிரேரணை நிறைவேறியது..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து, லங்கா சமசமாஜ கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி உறுப்பினர்களும், இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

No comments:

Post a Comment