பெரும்பாலான மாணவர்களின் உரிமைகள் எல்.ரி.ரி.ஈ.யினரால் பறிக்கப்பட்டுள்ளது! கட்டாயக் கல்வி 11 வரை! - பந்துல
"மாணவர்கள் சிறுவர் போராளிகளாகவும் இணைத்துக் கொள்ளப்பட்டதால் ஆரம்ப வகுப்பில் மாணவர்கள் சேர்ப்பது குறைவடைந்தது"
தரம் 8 வரை கட்டாயமாக்கப்பட்டிருந்த பாடசாலை கல்வி, கல்வி பொது தராதர சாதாரண தரம் வரை நீடிக்கப் பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலவசக் கல்வியின் மூலம் உயரிய பலன்களை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைக்கு செல்ல வேண்டிய வயதை எட்டிய, ஆனால் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையை வெளியிடும் வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் உதவியுடனும், யுனிசெப், யுனேஸ்கோ நிறுவனங்களின் பங்களிப்புடன் இம்மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. நூற்றில் ஒரு வீதமான குழந்தைகள் பாடசாலைக்கு செல்வதில்லையென அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்கள் 0.8 வீதமானவர் ஆவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பந்துல மேலும் தெரிவிக்கையில், புலிப்பயங்கரவாதம் காரணமாக கடந்த 30 வருடங்களாக மாணவர்களின் கல்வி உரிமை அழிக்கப்பட்டதாகவும், வடக்கு கிழக்கு மக்கள் மட்டும் எல்.ரி.ரி.ஈ.யின் செயல்பாடுகளால் பாதிப்படையவில்லை எனவும், பெரும்பாலான மாணவர்களின் உரிமைகள் எல்.ரி.ரி.ஈ.யினரால் பறிக்கப்பட்டன எனவும், மாணவர்கள் சிறுவர் போராளிகளாகவும் இணைத்துக் கொள்ளப்பட்டதால் ஆரம்ப வகுப்பில் மாணவர்கள் சேர்ப்பது குறைவடைந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரட்ன, யுனிசெப் நிறுவனத்தின் கல்வி பிரிவிற்கான தலைவர் சாரா பொல்மன் ஆகியோர் பங்குபற்றினர்.
0 comments :
Post a Comment