Monday, May 20, 2013

அனலைதீவுப் பாடசாலைக்கு கணனி வரும் காத்திருக்க சொல்லிவிட்டு சென்ற TNA பாராளுமன்ற உறுப்பினர்!

இரண்டு நாட்களுக்கு முன் தீவுப்பகுதிக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், அங்குள்ள மக்களுக்குச் சில வசதிகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதிகளை அள்ளிவழங்கிவிட்டுத் திரும்பியுள்ளார்.

தனது பாராளுமன்ற ஊதியத்திலிருந்து புதிய படகொன்றைப் பெற்றுத்தருவதாகவும், அனலைதீவுப் பாடசாலையொன்றுக்கு ஆய்வுகூடத்தையும் கணனி வசதிகளையும் பெற்றுத் தருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

மக்களைக் கண்டவுடன் இவ்வாறான வாக்குறுதிகளை வீசிவிட்டுப் போகிறவர், அவரது ஊதியப் பணத்திற்குள் அதையெல்லாம் எப்படிச் செய்துதரப் போகிறார் என்ற ஆராய்ச்சிகளுக்குள் நாம் இறங்க வேண்டாம். அரசாங்கத்தின் அற்ப சலுகைகளுக்கு ஏமாற வேண்டாம் சர்வதேசம் திரண்டு வரும்வரை பல்லைக் கடித்துக்கொண்டு கஷ்டங்களைச் சகித்திருங்கள் என்று மேடைகளில் முழங்கும் இவர்கள், அடிப்படை வசதிகளுக்குத் திண்டாடும் மக்களிடம் சென்று மாட்டிக்கொள்ளும்போது மட்டும் அற்ப சலுகைகளை தாங்களே செய்துதருவதாகச் சொல்லும் வாக்குறுதியளிப்புகளை ஏன் செய்ய நேர்கிறது?

இதே கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சி மக்களிடம் மாட்டிக்கொள்ளும் போதும், அந்த பாடசாலைக் கட்டடத்திற்கு நடவடிக்கை எடுக்கிறேன், இந்த வீதியைப் போட்டுத் தருகிறேன் என்று மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு வாக்குறுதிகளை அள்ளிவழங்கத் தயங்குவதில்லை. இவ்வாறு மக்களுக்கு வாக்குறுதி வழங்கிவிட்டு அவர் செய்வதெல்லாம் அவற்றைச் செய்துதருமாறு அரசாங்க அதிபருக்கு விநயமாகக் கடிதம் எழுதுவதுதான்.

இத்தகைய மக்களின் வாழ்வுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அரசாங்க அதிபர் மட்டத்திலேயே கடிதம் எழுதிக் கேட்டு நடந்துவிடக் கூடியதல்ல என்பது அவருக்குத் தெரியாமலில்லை. கூட்டமைப்பினரின் மக்களை ஏமாற்றும் தந்திரோபாயங்களில் இதுவும் ஒன்று அவ்வளவுதான்.

அரசாங்கமும், அரசாங்கத்துடன் இணைந்துநின்று, வடக்கில் அடிப்படை வசதிகளை இழந்து யுத்தத்தால் நொம்பலப்பட்ட மக்களுக்கு அந்த வசதிகள் உடனடியாகச் செய்துதரப்பட வேண்டும் - நிகழ்கால வாழ்வுக்கு வழி செய்யாமல் வெறுமனே வீரவசனங்களால் மக்கள்துயர் மாறிவிடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கட்சியினரும் செய்துவருவதும் அராயகம் என்பது உலகம் அறிந்ததே.

அபிவிருத்தி வேலைகளை ஒருபக்கம் திட்டிக்கொண்டே தங்களது ஆர்ப்பாட்டங்களாலும் மிரட்டல்களாலும்தான் அவை நடைபெறுகின்றன என்று காட்டுவதற்கும் சிறுபிள்ளைத்தனமான ஏமாற்று முயற்சிகளை கூட்டமைப்பினர் செய்வதுண்டு. மக்களின் வாழ்வாதார அடிப்படைத் தேவைகளை மிக எள்ளலுடன் அற்ப சலுகைகளுக்கு அவர்களிடம் போவதா? என்று மக்கள் நரம்புகளைச் சுண்டியிழுத்து மேடைகளிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முழங்குவது தெரிந்ததே.

ஆனால் வன்னியிலும் தீவுப்பகுதியிலும் அல்லலுறும் மக்களை நேரில் பார்க்கும்போது எதையாவது பெற்றுத்தருகிறோம் என்று அவர்களிடம் ஒப்புக்காவது சொல்லவேண்டி வருகிறது.ஏன் இந்த இரட்டைவேடம்? இவர்களால் மக்களது உடனடி வாழ்வுத் தேவைகளுக்கும் எதையும் செய்ய முடியவில்லைளூ நீண்டகாலமாகச் சொல்லி ஏமாற்றிவரும் தீர்வை எடுத்துத் தருவதற்கும் எந்த வக்கையும் காணவில்லை.

தீர்வைச் சர்வதேசம்தான் எடுத்துத் தரவேண்டும்ளூ அபிவிருத்திகளை அரசாங்கம்தான் பார்த்துச் செய்ய வேண்டும் என்றால் இவர்கள் எதற்கு இருக்கிறார்கள்? என்ற கேள்விக்குப் பதில்தான் நம் துயரநிலைக்கு விளக்கம். வீழ்த்தப்பட்ட உணர்வில் இருக்கும் மக்களுக்கு உணர்ச்சியையும் ஆவேசத்தையும் ஏற்றி தங்கள் அரசியல் இருக்கையை மட்டும் தொடர்ந்து பார்த்துக்கொள்வதுதான் அது!

2 comments :

Anonymous ,  May 20, 2013 at 9:41 PM  

It is surprising why some of the people still in "Deep Trance", they cannot just analyse what went wrong politically during the past decades.
We are defnitely in need of clear analytical minds.We just drive gripping the wheel in a trance

Anonymous ,  May 21, 2013 at 1:59 PM  

They will make bundle of fake promises,this what they were practising for decades and there is no difficulty for them to continue for another many decades.Just faking is their business.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com