Saturday, May 4, 2013

உலகின் முதல் சூரிய சக்தி விமானம் பயணத்தை தொடங்கியது.

அமெரிக்காவில் வாழும் சுவிட்சர்லாந்து நாட்டு விமானிகள் இருவர் சூரிய சக்தியினால் இயங்கும் ஒரு விமானத்தை வடிவமைத்துள்ளனர். 10 வருட கடின உழைப்பிற்குப் பின் இந்த விமானத்தை வடிவமைத்துள்ளதாக ஆண்ட்ரே போர்ச்பெர்க், பெட்ராண்ட் பிக்கார்ட் என்ற அந்த இரு விமானிகளும் தெரிவித்தனர்.

சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் சக்தியினால் இந்த விமானம் இயக்கப்படுவதால், இதற்கு எரிபொருள் தேவையில்லை.

இந்த விமானம் நேற்று சான்பிரான்சிஸ்கோ நகரின் தெற்கே உள்ள மொப்பெட் ராணுவ தளத்தில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியது. இவ்விமானம் கலிபோர்னியா, டல்லாஸ், வாஷிங்கடன் ஆகிய மாகாணங்கள் வழியாக நாடு முழுவதும் பறக்க உள்ளது. தட்பவெப்பம் சரியாக இருந்தால் விமானம் இந்த பயணத்தை 2 மாதகாலத்தில் நிறைவு செய்யும் என்று விமான வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் ஒலியை விட 5 மடங்கு அதிக வேகத்தில் சீறிப்பாயும் விமானத்தை அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'வேவ் ரைடர்' எனப்படும் இந்த நவீன விமான சோதனை வெள்ளோட்டம் கடந்த 1ம் தேதி பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் நடந்தது.

இந்த சோதனையில் ஆறே நிமிடங்களில் 230 கடல் மைல்களை கடந்து இந்த விமானம் சாதனை படைத்துள்ளது.

நிரப்பப்பட்ட எரிபொருள் சுமார் 240 வினாடிகளில் (6 நிமிடங்களில்) தீர்ந்த பின்னர், திட்டமிட்டபடி அந்த விமானம் கடலில் விழுந்தது.

ஓர் இடத்தில் இருந்து எதிர்முனையை ஒலி சென்றடையும் நேரத்தின் அளவைத்தான் ஒலியின் வேகம் என்று குறிப்பிடுகின்றனர்.

அவ்வகையில், ஒலியானது ஓர் வினாடிக்குள் உலர்காற்றுள்ள பிரதேசத்தில் தோராயமாக 343.2 மீட்டர் (ஆயிரத்து 126 அடி) தூரம் பயணிக்கும்.

இதன்படி, ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 236 கி.மீட்டர் தூரம் வரை ஒலி பயணிக்கும்.

ஒலியை விட 5 மடங்கு வேகமாக பயணிக்கும் அமெரிக்காவின் நவீன விமானம், மணிக்கு சுமார் 6 ஆயிரத்து 180 கி.மீட்டர் தூரம் வேகத்தில் பயணம் செய்ய வல்லது என்பது நிரூபணமாகி உள்ளது.

இந்த விமானத்தின் மூலம் சில மணி நேரத்திற்குள் உலகின் உள்ள எந்த மூலையில் உள்ள நாட்டின் மீதும் எளிதாக தாக்குதல் நடத்த முடியும். இந்த நோக்கத்திற்காகவே புதிய அதிவேக விமானத்தை அமெரிக்கா சுமார் 30 கோடி டாலர்கள் செலவில் மேம்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com