Wednesday, May 15, 2013

'மருந்தடித்து அழிக்கப்படும் நெற்பயிர்கள்'

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சிறுபோகத்தின் போது கட்டுப்பாட்டை மீறிய வகையில் விவசாயம் மேற்கொண்ட இரணைமடு விவசாயிகளின் வயல்கள் நீரப்பற்றாக்குறை காரணமாக அழிவைச் சந்தித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் கடந்த சிறுபோக வறட்சி என்பது, 2011ஆம் ஆண்டு காலபோக மழைவீழ்ச்சி குறைவுடன் தொடர்புபட்டிருந்ததை அனைவரும் அறிவார்கள். கடந்த சிறுபோக நெற்பயிற்செய்கை ஆரம்பித்த போது 26 அடியாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் இருந்தது. 26 அடி தண்ணீரை வைத்துக்கொண்டு வழமையான அளவு பயிற்செய்கைக்கு அனுமதித்தது அதிகாரிகளினதும், அரசியல்வாதிகளினதும் தவறே கடந்த 2012 சிறுபோகத்தில் நிகழ்ந்த அழிவிற்கு காரணம். அதனை விட வழமைக்கு மாறான வறட்சியும் ஒரு காரணமாகும்.

அதனை தொடர்ந்து 2012 இல் பெரும்போகத்தில் தொடர் மழையால் கிளிநொச்சி மாவட்ட வேளாண்மை அடியோடு அழிந்தது. போர் நிவாரணம் இல்லை, வறட்சி நிவாரணம் இல்லை, வெள்ள நிவாரணமும் இல்லை, வங்கியில் எடுத்த கடனை கட்டவும் வழியில்லை, அடகு வைத்த நகைகளை மீடகவும் வழியில்லை. இவ்வாறான சூழ்நிலையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள். இந்நிலையில் அழிவுற்றுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், அவர்களை மீட்கவும் திட்டம் தீட்டாத மாவட்ட அபிவிருத்திக்குழு விவசாயிகளின் வயலுக்கு புல்லு மருந்து அடிக்க ஒழுங்கான முறையில் திட்டம் தீட்டி நிதி திரட்டி, இன்று 1,000 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களை, பச்சை பயிர்களை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள செயலானது, விவசாயிகளுக்கு செய்யும் மகா துரோகம் ஆகும்.

'வாடிய பயிரைக் காணும் போது என் உள்ளம் வாடி நிற்கின்றேன்' என்று பாடினார் இராமலிங்க வள்ளலார். இவ்வாறான தமிழ் பரம்பரையில் வந்த நாம் எமக்கு உணவு தரும் நெற்பயிரையே அழிக்க முற்படுவது ஏன்? கடந்த முறை 26 அடி தண்ணீர் இருந்தது, இம்முறை 32 ½ தண்ணீர் இருக்கிறது. தொடர்ந்து சிறுபோக மழையும் பெய்து வருகிறது.

நெற்பயிற்செய்கையில் புதிய உத்திகளை கையாளலாம். 'காய்ச்சலும், பாய்ச்சலும் என்ற புதிய உத்தி மூலம் 1 ஏக்கருக்கு நாம் பாவிக்கும் நீரைக்கொண்டு 4 ஏக்கர் நெற்பயிரை சாகுபடி செய்யலாம். நீரை கட்டுப்பாடாக பாவிப்பதன் மூலம் இன்னும் பல்லாயிரம் ஏக்கர் சாகுபடி செய்யலாம். இப்பொழுது பெய்யும் சிறுபோக மழையும் நீரை சேமிப்பதற்கு உதவுகிறது.

வள்ளுவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சொன்னார் ' நீரிலும் நன்றதன் காப்பு' என்று. எனவே பயிரிட்டு முளைத்த பயிரை அழிக்காமல் காப்பாற்றுவதற்கு உரிய பொறுப்பை மாவட்ட அபிவிருத்திக்குழு உடனடியாக ஏற்க வேண்டும். விவசாயிகளுக்கு நட்ட ஈட்டினை வழங்குவதில் காட்டாத முனைப்பு நட்ட பயிரை அழிப்பதில் காட்டுவது ஏன் என்று விவசாயிகள் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டும்.
இந்த இலட்சணத்தில் இரணைமடு, யாழ்ப்பாணம் குடிநீர்த்திட்டம் செயற்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் காலபோக நெற்பயிரைக்கூட மருந்து அடித்து அழிக்கும் செயற்பாட்டிற்கே இட்டுச்செல்லும் என்றும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே மருந்து அடித்து விளைபயிரை அழிக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்தி அந்த பணத்தைக்கொண்டு வேறு நல்ல செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துவதுடன், இது தொடர்பாக மாற்று நடவடிக்கை ஒன்றுக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுவை உடன் கூட்டுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

No comments:

Post a Comment