Tuesday, May 28, 2013

சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிடுகின்றன! முன்னாள் எல்ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் ......! ஹெட்டியாராச்சி!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் இலங்கையில் வாழ முடியாமல் வெளிநாடுகளில் புகழிடம் பெற முயல்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்த புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் எல்ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் சமூகத்தில் சுதந்திரமாக எவ்வித பிரச்சினைகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களின் நலன் குறித்து புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாகவும், இதுவரையில் எந்தவொரு உறுப்பினரும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முறைப்பாடுகளை முன்வைக்க வில்லையெனவும் புனர்வாழ்வு ஆணையாளர் தர்சன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான விதத்தில் இராணுவ கெடுபிடிகள் மற்றும் அழுத்தங்கள் புனர்வாழ்வு பெற்ற உறுப்பினர்கள் மீது திணிக்கப்படுவதாக செய்தி வெளியிட்டிருந்ததமை குறித்து புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், படையினரிடம் சரணடைந்த 11 ஆயிரத்து 593 எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், சுமார் 350 பேர் மாத்திரமே சமூகமயப்படுத்துவதற்கான எஞ்சியுள்ளதாகவும் அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்படும் காலப்பகுதியில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவுறுத்தல்களும் சமூகமயப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான கடனுதவி வீட்டுத்திட்டம் என்பன குறித்தும் அரசாங்கம் உதவியளித்து வருவதாகவும், இந்நிலையில் 3 ஆயிரத்து 800 முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் சிவில் பாதுகாப்பு பிரிவில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுள்ளதோடு தனியார் துறைகளிலும் தொழில்வாய்ப்புக்களை பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புனர்வாழ்வு பெற்றமுன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களின் பொருளாதார சமூக நலன்தொடர்பில் ஆராய கிழக்கு மாகாணத்திலுள்ள சகல அரசாங்க அதிபர் அலுவலகங்களிலும் புனர்வாழ்வு ஆணையாளரின் உப அலுவலகமொன்று திறக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லையென புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் 4 சதவீதத்திற்கும் குறைந்த வட்டியுடன் சுயதொழிலுக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதுவரை சுமார் 2 ஆயிரம் பேருக்கு சுயதொழில் கடனுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com