Saturday, May 4, 2013

அஸாத் ஸாலியின் உண்ணாவிரதம் தொடர்கிறது....!

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஸாத் ஸாலி தொடர்ந்தும் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றார். அவர் தொடர்பில் மேலும் விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க ஸ்ரீவர்த்தனகுறிப்பிடும்போது, அஸாத் ஸாலி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் குறிப்பிட்டார். 72 மணித்தியாலங்கள் அவர் தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர், தடுத்து வைப்பதற்கான ஆணை கிடைக்கப்பெற்றதும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அஸாத் ஸாலி சென்ற 2 ஆம் திகதி பிற்பகல் கொலன்னாவையிலுள்ள அவரது வீட்டில் வைத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் பலவற்றின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

எது எவ்வாறாயினும், அஸாத் ஸாலி உணவு மற்றும் மருந்தை உட்கொள்ள மறுத்து வருவதாக அவ்வைத்தியசாலையின் உதவிப் பணிப்பாளர் வைத்தியர் சிறில் த சில்வா குறிப்பிட்டார். உணவு உட்கொள்ளாததன் காரணமாக நோய்வாய்ப்பட்டுள்ள அஸாத் ஸாலி, நேற்று (03) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டார்.

(கேஎப்)

No comments:

Post a Comment