Sunday, May 26, 2013

பாரிஸில் துப்பாக்கியுடன் ரோந்து சென்ற ராணுவ வீரர் மீது தாக்குதல்! தாக்கியவர் மாயம்!!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், மக்கள் நடமாட்டம் ஜேஜே என்றிருக்கும், பிசியான வர்த்தக ஏரியாவில், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரெஞ்ச் ராணுவ வீரர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம், பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25 வயதான Cédric Cordier என்ற பெயருடைய இந்த ராணுவ வீரர், வேறு வீரர்களுடன் ரோந்து சென்றுகொண்டிருந்தார். பாரிஸில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சுறுத்தல் உள்ளதால், உல்லாசப் பயணிகள் அதிகம் நடமாகும் இடங்கள், வர்த்தக மையங்கள், மற்றும் நகருக்குள் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக ராணுவத்தினர் ரோந்து செய்வது தற்போது நடைமுறையில் உள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ரோந்து சென்றுகொண்டிருந்த ராணுவ வீரரே தாக்கப்பட்டுள்ளது அங்கே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸில் உள்ள La Défense ரயில்வே ஸ்டேஷனை ஒட்டியுள்ள ஷாப்பிங் ஏரியாவிலேயே மூன்று ராணுவ வீரர்களும் ரோந்து செய்துகொண்டிருந்தனர். மாலை 6 மணிக்கு, அப்பகுதியில் ஜன நடமாட்டம் மிக அதிகமாக இருந்தது.

அப்போது, ராணுவ வீரரை பின்புறமாக அணுகிய நபர், தனது கையில் இருந்த கூரிய ஆயுதத்தால் கழுத்தில் குத்தியுள்ளார். கழுத்தில் குத்திய நபர் வாய் திறந்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கூட்டத்துக்குள் கலந்து மறைந்து விட்டார். கழுத்தில் காயமடைந்த ராணுவ வீரர் தற்போது வைத்தியசாலையில் உள்ளார்.

தாக்குதல் நடந்தபோது ராணுவ வீரர் யூனிபார்மில் இருந்தார். அவரது கையில் எந்திரத் துப்பாக்கியும் இருந்தது. அவருடன் ரோந்து சென்ற மற்றைய இரு வீரர்களும் துப்பாக்கி வைத்திருந்தனர்.

அப்படியிருந்தும், ராணுவ வீரரை குத்திய நபரால் தப்பிச் செல்ல முடிந்திருக்கிறது.

அந்தப் பகுதியில் அப்போது இருந்தவர்களின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்தியவர், கூர்மையான பொருள் ஒன்றால் கழுத்தில் குத்தியுள்ளார். அது ஒரு பாக்ஸ்-கட்டர் என்கிறார்கள் சிலர்.

குத்திவிட்டு மாயமாக மறைந்த நபர், அந்த ஷாப்பிங் ஏரியாவில் உள்ள செக்யூரிட்டி கேமராக்களில் பதிவாகியுள்ளார். அதன்படி அவர் சுமார் 1.9 மீட்டர் உயரமுடைய நபர் என்று தெரியவந்துள்ளது. ராணுவ வீரரை தாக்க வந்தபோது, கருப்பு நிற பான்ட்ஸ், மற்றும் ஜெர்சி அணிந்திருந்தார்.

பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் Jean-Yves le Drian உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று ராணுவ வீரரை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த ராணுவ வீரர் தாக்கப்பட்டதன் காரணம், அவர் ராணுவ வீரராக இருந்ததால்தான். தனிப்பட்ட Cédric Cordier என்ற நபரை தாக்கவில்லை. ராணுவ யூனிபார்மில் அவர் இருந்ததால் தாக்கப்பட்டுள்ளார்” என்றார்.

நேற்றிரவு எதியோப்பியாவுக்கு புறப்பட்டு சென்ற பிராஸ் ஜனாதிபதி François Hollande, “சில தினங்களுக்கு முன் லண்டனில் பொது இடத்தில் ராணுவ வீரர் தாக்கப்பட்டதற்கும், இதற்கும் தொடர்பு உள்ளதா என்பதை தற்போது கூறமுடியாது” என்று கூறியுள்ளார்.

தாக்குதலுக்கான காரணம், இன்னமும் தெரியவில்லை. மாலி நாட்டில் பிரான்ஸ் நாட்டு ராணுவம், அங்குள்ள தீவிரவாத அமைப்புக்கு எதிராக யுத்தம் புரிவதால், பிரான்ஸில் தாக்குதல்கள் நடத்தப்படும் என அங்குள்ள தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

மாலியில் எச்சரிக்கை விடுத்த அமைப்பு, அல்-காய்தாவின் வட ஆபிரிக்க பிரிவு என்பதால், அந்த எச்சரிக்கை பிரான்ஸால் சீரியசாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதையடுத்தே, பாரிஸில் ராணுவ வீரர்களின் ரோந்து நடக்கிறது. ராணுவ வீரர் மீது தாக்குதல் நடந்ததும் அதனால்தான் போலிருக்கிறது.



-நன்றி விறுவிறுப்பு



No comments:

Post a Comment