Saturday, May 11, 2013

குற்றத்தை ஏற்றுக் கொண்டதால் அசாத்சாலி விடுதலை!

அரசாங்கத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்தமை, இனவாதத்தை தூண்டியமை, இனங்களிடையே குழப்பம் ஏற்படுத்தல் அடங்கலாக பல குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் அசாத்சாலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டார்.

சுகவீனமுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அசாத்சாலி நேற்றுப் பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று உரிய ஆவணத்தில் கையொப்பத்தினை பெற்றுக்கொண்டதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். எனினும் விடுவிக்கப்பட்ட அசாத் சாலியின் உடல்நிலை பலவீனமாக இருந்தமையால் அவரை அவரது உறவினர்கள் தனியார் மருத்துவ மனையொன்றில் அனுமதித்தனர்.

இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் அவர் வெளியிட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்டு விசாரணைக்காக அசாத்சாலி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கான உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

அசாத்சாலியை விடுவிக்குமாறு கோரி சட்டத்தரணி கெளரிசங்கரி தவராசாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சுகத கம்லத் மேற்படி மனுவை ஆராய்வதற்கான கால அவகாசம் கோரினார் அதனை கவனத்திற் கொண்ட உச்சநீதிமன்றம் மேற்படி மனுமீதான விசாரணையை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை பிற்போட்டது.

கைதுசெய்யப்பட்டுள்ள அசாத் சாலியை ஆஜர்படுத்துமாறு கோரி அவரது மகள் தாக்கல் செய்திருந்த மனுவும் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு அதன் மீதான விசாரணையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தல், இனவாதம், இனங்களிடையே குழப்பம் ஏற்படுத்தல் அடங்கலான பல குற்றச்சாட்டுக்களின் பேரில் அசாத்சாலி கடந்த 2ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழேயே இவர் கைது செய்யப்பட்டதாகவும் இவரின் கைதின் பின்னணியில் அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது என்றும் பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணி ப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com