Friday, May 10, 2013

தமிழரசுக் கட்சியின் காத்திருப்புக்கு பலன் கிட்டுமா......?

இதற்கு முன்னரென்றால் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சியினர் மீது எறிகணைகளை வீச ஆரம்பிப்பதுதான் வழக்கம். இம்முறை ஒரு சேஞ்ச்சுக்கு தங்களுக்குள்ளேயே தாக்குதல்களை ஆரம்பித்திருக்கிறார்கள்.

எதிர்ப்பும் பகைவெறுப்பு ஏச்சுக்களும் உணர்ச்சிகரத் தாக்குதல்களும் இல்லாமல் தேர்தல்களை இவர்கள் எதிர்கொண்டதில்லை என்பதை மக்கள் அறிவர். தமிழ் மக்களுக்கு நேர்ந்த அத்தனை துன்பங்களும் இதுகாலவரை தலைவர்களாகச் சொல்லிக்கொண்டதால் ஏற்பட்டவையே. அதன் நீட்சிதான் இன்று அவர்களுக்குள்ளேயே நடக்கும் அடிதடி.

கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவுசெய்ய முடியாது என்று மறுத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன், எமது கட்சியில் முன்னாள் பயங்கரவாதிகள் உள்ளனர். அதை அரசியல் கட்சியாக பதிவு செய்தால் மற்றையவர்கள் எம்மை மதிப்பார்களா? என்று காட்டமாகக் கேட்டுள்ளார். இதற்குப் பதில் அறிக்கை வெளியிட்டிருக்கும் சுரேஷ் அணியைச் சார்ந்த சிவசக்தி ஆனந்தன், கூட்டமைப்பைத் தொடர்ந்து பிளவுபடுத்தும் கட்சி அரசியலைக் கைவிடுங்கள் என்று சம்பந்தனையும் தமிழரசுக் கட்சியினரையும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியின் துணை பொதுச்செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களின் வீட்டிற்கு கல் லெறிந்து தாக்கப்பட்டிருக்கிறது. மறுநாள் ஊடகச் சந்திப்பை நடத்திய சிவஞானம் அவர்கள், கூட்டமைப்பை உடைக்க சிலர் முயற்சிப்பதாகவும் ஆனால் கூட்டமைப்பு ஒருபோதும் உடையாது என்றும் கூட்டமைப்புக்குள் தனிக்கட்சிக்கு இடமில்லை, தமிழர் விடுதலை இயக்கம் தமிழரசுக் கட்சியை விட்டு விலகாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், வட மாகாணசபைத் தேர்தலில் சீ.வீ.கே.சிவஞானம் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதால், அவரை அச்சுறுத்தும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இணையத்தளங்களில் தகவல் கூறப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான சிவஞானம் அவர்களின் வீட்டிற்குக் கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது பற்றியோ அவர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திக் கண்டனம் தெரிவித்தது பற்றியோ தமிழரசுக் கட்சியின் பத்திரிகையில் எதுவும் வரவில்லை என்பது உள்வீட்டுக் குழப்பம் நடைபெறுவதையே உறுதிப்படுத்துகிறது.

வட மாகாண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று வந்த பிரச்சினையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனி யான கட்சியாகப் பதிவு செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் தீவிரமாகியது. தமிழரசுக் கட்சியே தன்னிச்சையாக முதல்வர் வேட்பாளரைத் தீர்மானிக்கும் என்ற நிலைமைதான் சுரேஷ் அணியினர் பிரிந்துநின்று கோஷமிடுவதற்கு காரணம். இப்போது அந்தத் தமிழரசுக் கட்சிக்குள்ளும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தீர்மானிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதையே நடக்கும் சம்பவங்களும் அறிக்கைப் போர்களும் காட்டுகின்றன.

இதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு நண்பர் சொன்னார் - தமிழ்மக்களிடம் ஒற்றுமையைக் காட்டச்சொல்லிக் கேட்டு வரும் தமிழ்க் கூட்டமைப்பினர் தாங்கள் ஒற்றுமைப்பட்டிருப்பது தமிழ்மக்களின் நலன்களை உத்தேசித்தல்ல. அவர்கள் அதை அறிவார்கள். அவர்களை ஒற்றுமைப்படுத்துவதும் அந்தந்தக் கட்சித் தலைவர்களோ பிரமுகத் தொண்டர்களோ மதகுருமாரோ கொள்கையோ, லட்சியங்களோ அல்ல. மாறாக, அவர்கள் எதிரிகளாகச் சொல்லும் அரசாங்கமும் அரசபடையினரும்தான் தங்களை ஒற்றுமையாக்கி உதவுவர் என்று அவர்கள் நம்பியிருப்பதாக சொன்னார் நண்பர்.

இம்முறை குறைந்தபட்சம் தமிழரசுக் கட்சிக்குள்ளேயாவது ஒற்றுமையாக ஒரு பொதுவேட்பாளரைக் கண்டுபிடிக்க, அந்த உதவியைத்தான் அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிகிறது.

1 comments :

Anonymous ,  May 11, 2013 at 11:43 AM  

How we can expect this oldest party and now a mixture party would do good job to the tamils and to the peninsula.The party being muddled with power hunger,jealousy,ego centrics
selfishness,cheating,deceiving etc etc.They were already muddled up the
followers
and still the followers are muddled up.The followers are totally in TRANS.If the voters are very clever to judge,hope they will find suitable,efficient,sincere and honest young people as their representatives and they can have a watch for 5 years,if they are not pulling on well just kick them off and go for the good ones,because you are the great decision makers in a democratic country.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com