வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு வாக்களிக்கும் வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்!
வாடகை வீடுகளில் குடியிருப் போருக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டு மென்றும் அதனைத் தடுத்தல் சட்ட விரோத செயலாகுமெனவும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வாடகைக்கு குடியிருப்போர் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களின் பெயரையும் பதிவு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்ட தேர்தல்கள் ஆணையாளர், வீட்டு உரிமை தொடர்பில் வீண் சந்தேகங்களுக்கு இதில் இடமில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து மீள இலங்கைக்கு வர இருப்பவர்களது பெயர்களை அவர்களது பெற்றோர் அல்லது உறவினர்கள் தேர்தல் இடாப்பில் பதிவு செய்ய முடியும். அவ்வாறு இலங்கை கடவுச்சீட்டு உள்ளவர்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் எனவும், அவர்கள் எமக்கு கடிதம் அனுப்பினால் நாம் அதற்குரிய கவனத்தை செலுத்துவோம் எனவும், எனினும் வாக்களிப்பதற்கு அவர்கள் இங்கு வரவேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தேர்தல் தினத்தன்று கடமையில் ஈடுபட்டுள்ள நிரந்தர ஊடகவியலாளர்களும் தபால் மூல வாக்களிப்பிற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக்கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கப்படுமானால் அது விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் செயலகத்தில் நேற்று நடை பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் குறிப்பிட்ட தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவிக்கையில்:-
1931 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை யரான எமக்கு வாக்குரிமை உள்ளது. ஆசியாவில் பல நாடுகளில் வாக்குரிமை இல்லாத காலத்திலும் எமக்கு வாக்குரிமை இருந்தமை பெருமை தருகிறது. இந்திய வம்சாவளி மக்களுக்கு வாக்குரிமை இல்லாதிருந்த போதும் 1989 ஆம் ஆண்டு புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட்டு அவர்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டது. இலங்கையில் இப்போது அனைவரும் வாக்குரிமையுடையவர்களே.
வாக்களித்தல் என்பது ஒவ்வொருவரதும் உரிமையாகும். குறிப்பாக கடந்த கால வாக்களிப்புக்களை நோக்கினால் நகர்ப் புறங்களில் வசிக்கும் உயர் மட்டத்தினரும் மிகக் குறைந்த வருமானமுள்ள அடிமட்ட மக்களும் வாக்களிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்பது தெரியவருகிறது.
மலையகப் பகுதிகளில் வாக்காளர் பதிவுப் படிவம் வழங்குவதற்கு அதிகாரிகள் செல்ல முடியாத அல்லது அவ்வாறு அதிகாரிகள் சென்றாலும் குடியிருப்பாளர்கள் தொழிலுக்குச் சென்றிருப்பது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதால் இத்தகையோருக்கு வாக்குரிமை கிடைப் பதில்லை. அத்துடன் தோட்டங்களுக்கு வெளியில் தொழில்களில் ஈடுபட்டுள்ளோர், அங்குமின்றி தொழில் செய்யும் இடத் திலுமின்றி வாக்களிக்க முடியாத நிலையே தொடர்கிறது.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வாழ்வோரும் தம்மை வாக்காளர் இடாப்பில் பதிவதில்லை. அத்துடன் வாடகை வீடுகளில் வசிப் போருக்கும் வீட்டு உரிமையாளர்களின் வீண் சந்தேகங்களால் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.
இவற்றைச் சரி செய்வதற்கு விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விளம்பரங்கள் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுவதுடன் தொலைக்காட்சி மூலம் இது தொடர்பில் தெளிவுபடுத்தும் பிரசாரங்களையும் முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment