தனியார் பாடசாலைகளில் அதிக கட்டணம்? விரைவில் கண்காணிப்பு பொறிமுறை அறிமுகம் - பந்துல குணவர்தன
அரச அனுசரணையுடன் இயங்கும் 78 தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகளை கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக பொறிமுறையொன்றை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்துமென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், குறித்த பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதியை செலவிடுகிறது. இலவச புத்தகங்களும் வழங்கப்படுகின்றன. எனினும் பாடசாலையை கண்காணிப்பதற்காக பொறிமுறைகள் எதுவும் இதுவரை காணப்படவில்லை. குறித்த பாடசாலைகளில் ஒரு தவணைக் கட்டணமாக 30 ஆயிரம் ரூபா முதல் 40 ஆயிரம் ரூபா வரை அறவிடப்படுகிறது. 78 தனியார் பாடசாலைகளிலும் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
அத்துடன் அரசாங்கம் ஆசிரியர்களுக்கான சம்பளம், மாணவர்களுக்கான இலவச நூல்களை வழங்கிய போதிலும் பெற்றோர்கள் அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பில் எதிர்க்கட்சியினர் உட்பட எந்தவொரு பிரிவினரும் வாய் திறப்பதில்லை. அரசாங்க பாடசாலைகளை மாத்திரமே விமர்சிக்கின்றனர். இந்நிலையில் தனியார் பாடசாலைகளை கண்காணிக்க புதிய பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதேபொல் நாடெங்கிலும் காணப்படும் சர்வதேச ஆங்கில பாடசாலைகளும் கண்காணிக்கப்பட வேண்டுமென நலன்விரும்பிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கூடுதலான சர்வதேச ஆங்கில பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் எவ்வித அடிப்படை தகுதியுமின்றி காணப்படுகின்றனர்.
பாடசாலைகளின் உரிமையாளர்கள் குறைந்த சம்பளத்திற்காக தகுதியற்ற ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இதனால் பாடசாலை மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
அத்துடன் அதிகளவான சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆங்கிலத்தை மாத்திரமே பேசக்கூடியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஏனைய பாடங்கள் தொடர்பில் போதிய அறிவு கிடைப்பதில்லை. இதனால் சர்வதேச ஆங்கில பாடசாலைகள் பெரும்பான்மையானவை ஆங்கிலம் பேசத்தெரிந்த அறிவற்ற சமூகத்தை உருவாக்குவதாக நலன்விரும்பிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
0 comments :
Post a Comment