Tuesday, May 21, 2013

பாகிஸ்தான் ராணுவ கம்ப்யூட்டர்களுக்குள் ஊடுருவிய இந்திய தனியார் குழு! இந்திய உளவுத்துறைக்கு ஒன்றுமே தெரியாதாம்!

“ஒரு நாட்டு ராணுவத்துக்கு அல்லது உளவுத்துறைக்கு மட்டுமே ஆர்வம் இருக்கக்கூடிய மற்றொரு நாட்டு ராணுவ தகவல்களில், இந்தியாவில் இருந்து இயங்கும் தனிப்பட்ட குழுவுக்கு என்ன ஆர்வம் இருக்க முடியும் என்பது புரியவில்லை” என்று கூறும் நார்வே கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனம் நார்மன், “ஆனால், இது இந்திய அரசால் செய்யப்பட்ட காரியமாகவும் தெரியவில்லை” என்கிறது.

பாகிஸ்தான் ராணுவம் தொடர்பான கம்ப்யூட்டர்களை ஊடுருவிய கம்ப்யூட்டர் ஹக்கர் குழு ஒன்று இந்தியாவில் இருந்தே செயல்படுவதாக கூறியுள்ளது, நார்வேயில் உள்ள கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனம், நார்மன்.

“பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் கம்ப்யூட்டர்களை இந்த குழுவினர் ஊடுருவியுள்ள போதிலும், இந்த கம்ப்யூட்டர் தாக்குதல் இந்திய அரசால், அல்லது இந்திய மத்திய அரசு உளவுத்துறைகளால் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை” எனவும் கூறியுள்ளது நார்வே நிறுவனம்.

அதாவது, இந்தியாவில் இருந்து இயங்கும் கம்ப்யூட்டர் அறிவு அதிகமுள்ள, தனிப்பட்ட நபர்கள் அடங்கிய குழுவின் வேலை இது என்கிறார்கள்.

பாகிஸ்தான் ராணுவ அமைச்சின் Mac கம்ப்யூட்டர்களுக்குள் இந்தக் குழு ஊடுருவியுள்ளது. அதற்காக ஆப்பிள் நிறுவனத்தின் டெவலப்பர் ஒருவரின் ஐ.டி. அக்கவுன்ட் (valid Apple Developer ID account) பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த நபர் அமெரிக்காவில் உள்ளார். அவருக்கும் இந்த ஊடுருவல் நடவடிக்கைகளுக்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது.

பாகிஸ்தான் ராணுவ கம்ப்யூட்டர்களுக்குள் ஊடுருவிய குழு இந்தியாவில் இருந்து செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தமது ஐ.பி. அட்ரஸை மாற்றியுள்ள போதிலும், இந்திய ஐ.பி. அட்ரஸ்களில் இருந்தே ட்ரான்ஸாக்ஷன்கள் அனைத்தும் செய்யப்பட்டதை தாம் கண்டுபிடித்ததாக நார்வே நிறுவனம் தெரிவித்துள்ளது

ஆனால், இந்தியாவில் உள்ள தனிப்பட்ட குழுவால் பாகிஸ்தான் ராணுவ அமைச்சு கம்ப்யூட்டர்களில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்கள், இந்திய பாதுகாப்பு அமைச்சு அல்லது, மத்திய உளவுத்துறைகளிடம் கிடைத்தால், அவை அவர்களுக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறது நார்வே நிறுவனம்.

“இந்த இந்தியக் குழு, சுமார் 600 டொமைன்களை உருவாக்கி, அவற்றின் மூலம் நூற்றுக்கணக்கான கீ-லாக்கர்களை (keylogger) அனுப்புகிறது. அவற்றின்மூலம், ஊடுருவப்பட்ட ஒரு Mac கம்ப்யூட்டரை இயக்கி, அதன் திரையில் வரும் தகவல்களை ஸ்கிரீன்-ஷாட் எடுக்க முடியும்” என்கிறார், நார்வே கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவன ஆராய்ச்சியாளர் ஸ்னோர் ஃபாகர்லான்ட்.

“இந்தியாவில் உள்ள கம்ப்யூட்டர் அறிவு அதிகமுள்ள சிலர் இதை செய்திருக்க முடியும்” என்று கூறும் அவர், “இவர்கள் அனுப்புவது ஒருவித ஸ்பைவேர் என்றாலும், அதில் ஆச்சரியமூட்டும் சில அம்சங்களும் உள்ளன” என்கிறார்.

பாகிஸ்தான் ராணுவ கம்ப்யூட்டர்களுக்குள் ஊடுருவுவதற்கு முன், இந்தக் குழு தமது ஸ்பைவேர்களை ஈரான், தாய்லாந்து, ஜோர்தான், இந்தோனேசியா, பிரிட்டன், நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரியா, அமெரிக்கா, போலந்து ஆகிய நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களுக்கும் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

இந்த நாடுகள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பது புரியவில்லை. இந்தியாவில் இருந்து இயங்கும் ஒரு குழுவுக்கும், இந்த நாடுகளுக்கும் என்ன சம்மந்தம் என்பதும் தெரியவில்லை.

மற்றொரு ஆச்சரிய தரவு, அமெரிக்காவில் இவர்கள் ஊடுருவிய கம்ப்யூட்டர்கள், சிக்காகோவில் உள்ள Mercantile Exchange, சில அமெரிக்க சட்ட நிறுவனங்கள், மற்றும் சில பாஷன் டிசைன் நிறுவனங்களுக்கு சொந்தமானவை. இவையும், ஒன்றுக்கு ஒன்று சம்மந்தமற்ற நிறுவனங்கள்.

நார்வேயில் உள்ள சில கம்ப்யூட்டர்களில் ஊடுருவல் நடந்ததை அடுத்து, நார்வேயில் உள்ள பெரிய இன்டர்நெட் வழங்கல் மொபைல் நிறுவனமான Telenorக்கு புகார் கிடைத்ததை அடுத்தே நார்வே கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனம் நார்மன் இந்த புலனாய்வில் இறங்கியது.

“எமக்கு கிடைத்துள்ள தகவல்களை இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம். இந்தியாவில் இருந்து இயங்கும் குழுவை பிடித்து தண்டனை கொடுப்பதைவிட, அந்தக் குழுவிடம் பாகிஸ்தான் ராணுவம் பற்றி என்ன தகவல்கள் உள்ளன என்று அறிந்துகொள்ள இந்திய உளவுத்துறை ஆர்வம் காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்கிறார், நார்வே கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவன ஆராய்ச்சியாளர் ஸ்னோர் ஃபாகர்லான்ட்.

யாருப்பா இந்த கில்லாடிங்க குரூப்?

இப்படியான கட்டுரைகள் படிப்பதில் உங்களுக்கு ஆர்வமா? எப்படியான கட்டுரைகள் உள்ள பக்கங்களில் வாசகர்கள் அதிக அளவில் விளம்பரங்களில் கிளிக் செய்கிறார்களோ, அப்படியான கட்டுரைகளை அதிகம் வெளியிடுகிறோம். உங்களுக்கு பிடித்த கட்டுரைகளுக்கு எப்போதுமே ஆதரவு கொடுங்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com