Saturday, May 25, 2013

பகிரங்க கலந்துரையாடலுக்கு வாரீர்! ஹிஸ்புல்லாவிற்கு பகிரங்க அழைப்பு!

நல்லாட்சிக்கான மக்களமைப்பு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவினை தம்முடன் பகிரங்க கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து அவரது கைக்கு கிடைக்கும் வகையில் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது. அக்கடிதத்தில்...

அல்ஹாஜ். எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ் MP
பொருளாதார பிரதியமைச்சர்
பிரதியமைச்சர் காரியாலயம்
காத்தான்குடி

அன்புடன், அஸ்ஸலாமு அலைக்கும்

தங்களுடனான நேரடி கலந்துரையாடல்

கடந்த 17.05.2013ம் திகதியன்று காத்தான்குடி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது, இவ்வூரின் அபிவிருத்தி மற்றும் அரசியலோடு தொடர்புபட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மூன்று மாதகாலத்திற்கொரு தடவை எம்மோடு கலந்துரையாடுவதற்குத் தயாராக இருப்பதாக நீங்கள் பகிரங்கமாகத் தெரவித்திருந்தீர்கள். அதனை ஊடகங்கள் பலவும் உறுதிப்படுத்தி செய்திகள் வெளியிட்டிருந்தன. அது தொடர்பாகவே இக்கடிதத்தினை நாம் எழுதுகின்றோம்.

அரசியல் என்பது நூறு வீதம் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஏனைய விவகாரங்களும் எவ்வாறு கையாளப்படல் வேண்டும் என்ற விடயங்களை நாம் மிகத் தெளிவாகவும், தொடர்ச்சியாகவும் கூறி வந்திருக்கின்றோம்.
மேலும் அபிவிருத்தி என்ற பெயரில் பொதுமக்களின் பணம் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் சுரண்டப்படுவதனையும், இதன் காரணமாக தரமற்ற, நீடித்து நிலைக்காத அபிவிருத்திகள் மக்களின் தலையில் திணிக்கப்பட்டு வருகின்ற சம்பவங்ளையும் நாம் மிகவும்
தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் சுட்டிக்காட்டித் தெரிவித்து வந்திருக்கின்றோம்.

அத்தோடு இவ்வூரின் அபிவிருத்திகள் எவ்வாறு சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளையும், திட்டங்களையும் நாங்களாகவே உங்களைத் தேடி வந்து கலந்துரையாடியுள்ளதோடு தங்களின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காத்தான்குடி நகர சபையிலும் இவற்றை பல சந்தர்ப்பங்களில் முன் வைத்துள்ளோம். இருந்தாலும் இவற்றை சமூகத்தின் நன்மை கருதி ஏற்றுக் கொள்கின்ற அல்லது குறைந்த பட்சம்
பரிசீலனை செய்கின்ற மனோநிலை தங்களிடம் இருக்கவில்லை என்பது எங்களின் கசப்பான அனுபவமாகும்.

மேலும் பல உண்மைகுப் புறம்பான விடயங்களை அற்ப அரசியல் இலாபங்களுக்காக நீங்கள் பொதுமக்களின் முன்னிலையில் தெரிவித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் உங்களோடு மக்கள் முன்னிலையில் பகிரங்கமாகப் பேசுவதற்காக நாம் உங்களை கடந்த காலங்களில் பலமுறை அழைந்திருக்கின்றோம். அவ்வாறான சந்தர்ப்பங்கில் எல்லாம் எமக்கு எவ்வித பதில்களையும் அளிக்காமல் நீங்கள் நழுவிக் கொண்டுள்ளீர்கள். இருப்பினும் எம்முடனான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகவிருப்பதாக நீங்கள் இப்போது தெரிவித் திருப்பதனை நாம் வரவேற்கின்றோம். தவறுகளை ஏற்றுக் கொண்டு சிறந்த ஆலோசனைகளை உள்வாங்கி மக்களுக்கு மிகச் சிறந்தவற்றை வழங்க வேண்டும் என்ற நேர்மையான உணர்வுடன் இந்தப் பேச்சுவார்த்தைக்கு நீங்கள் முன் வருவீர்களானால் அது நமது சமூகத்திற்கு மிகவும் நன்மையளிப்பதாக அமையும் என்பது எமது நம்பிக்கையாகும்.

அந்த வகையில் உங்களுடனான பகிரங்கப் பேச்சுவார்த்தை ஒன்றினை நடாத்துவதற்கான சம்மதத்தினைத் தெரிவிப்பதென கடந்த 22.05.2013ம் திகதி இடம்பெற்ற எமது சூறா சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டது.

எனவே, இப்பேச்சுவார்த்தையை காலந்தாழ்த்தாது மிகக் கூடிய விரைவில் நடாத்துவதற்கு திகதியொன்றை எமக்கு அறிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


நன்றி
இவ்வண்ணம்
ஒப்பம்
.................................
பொதுச் செயலாளர்
நல்லாட்சிக்கானமக்கள் இயக்கம்
காத்தான்குடி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com