Tuesday, May 14, 2013

அரசுடன் இணைகிறதா பொதுபல சேனா....? வடக்கில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன சிங்கள ராவய, சிங்கள ராவண பலய!!

வடக்கில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், யுத்தத்தினால் வடக்கிலிருந்து வெளியேறிய சிங்களவர்களை அங்கு குடியேற்றுவதற்கு அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு குறிப்பிடுகிறது.

யுத்தத்தின் பின்னர் அப்பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம்மக்கள் குடியமர்த்தப்பட்டபோதும் ஒரு சிங்களக் குடும்பத்தைக் கூட அங்கு குடியமர்த்தாமை, சிங்கள மக்களின் மனித உரிமையை மீறியமையை எடுத்துக்காட்டுவதாக அவ்வமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

'யுத்தத்தினால் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 17000 அளவில் சிங்கள மக்கள் தங்களது ஊரையும் உடைமைகளையும் விட்டு வெளியேறி பிற இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். கிளிநொச்சி மற்றும் வன்னியை எடுத்துநோக்கினால் இதன் அளவு இதிலும் கூடுதலாகும்.

ஆயினும், யுத்தத்தின் வெற்றிபெற்ற கையுடன், அங்கு தமிழ், முஸ்லிம் மக்களைக் கொண்டுபோய் குடியமர்த்தினர். ஆயினும் ஒரு சிங்களக் குடும்பத்தைக் கூட அங்கு கொண்டு சென்று குடியமர்த்தவில்லை.

இப்படியான ஒரு காலகட்டத்தில் அரசாங்கம் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை வைக்க முனைவதன் மூலம் சிங்கள மக்களுக்கான வாக்களிக்கும் உரிமையை நிராகரிக்கிறது எனலாம். இது மனித உரிமை மீறல் செயலாகும். அன்று யுத்தத்தின் மூலம் பெறமுடியாதுபோன, தமிழீழத்தை மீளப் பெறுவதற்கான வழியே இதுவாகும். அதற்காகத்தான் இந்த முன்னெடுப்பு...

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உரிமைகளை வழங்குவதில் நாங்கள் கிஞ்சித்தேனும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம். நாங்கள் சொல்வதெல்லாம் என்னவென்றால், சிங்களவர்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அங்கு தமிழ், சிங்கள முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் எங்களுக்காக ஒரு துளியேனும் பேசாதிருப்பதைப் பற்றி நாங்கள் சிந்திக்கிறோம். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராவண பலயவின் அமைப்பாளர் இன்தெகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், இதுதொடர்பில் கருத்துரைக்கும்போது, வடக்கிற்குத் தேவையானது வட மாகாணத் தேர்தல் அல்ல. வடக்கிற்கு அங்கு மாகாண சபையொன்றை தேவையில்லை. அதனை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

எதுஎவ்வாறாயினும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தல் நடைபெற முன்னர் அங்குள்ள இராணுவ மற்றும் காணி அதிகாரங்கள் இல்லாமற் செய்ய வேண்டும். எதேச்சையாக அங்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் அதன் மூலம் தமிழீழத்திற்காக ஏங்கியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து வெற்றிக்களிப்பில் ஆனந்தக் கூத்தாடுவார்கள். மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

1 comment:

  1. We need a very peaceful and calm atmosphere.why not we grant permission and resettle everyone as they pleased.Peace ,courage,humility and unification are needed to the country especially for the prosperity of the nation.

    ReplyDelete