Wednesday, May 1, 2013

தொழிலாளர்களின் உயர்வுக்காக உழைப்பேன் - மே தின செய்தியில் மஹிந்த தெரிவிப்பு!

தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அணி திரண்டுள்ள மக்களுடன் தானும் இணைந்துகொண்டு அவர்களின் உயர்வுக்காக உழைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை மதிப்புடனும் கௌரவத்துடனும் கொண்டாடுவதற்கு சந்தர்ப்பத்தை எமக்களித்த எமது நாட்டின் உழைக்கும் மக்களுக்கு தேசத்தின் நன்றி மிகுந்த கௌரவத்தை சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மே தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாடு இன்று ஒரு மத்திய தர வருமானம் பெறும் நாடாக காணப்படுகிறது. தேசிய பொருளாதாரத்தை சரியான திசையில் செலுத்தியதன் காரணமாகவே இந்த நிலையை எம்மால் அடைய முடிந்துள்ளது. இந்நிலையில் குறித்த வெற்றிக்கு பின்னாலுள்ள மிக முக்கிய சக்தியாக எமது நாட்டின் உழைக்கும் மக்கள் காணப்படுகின்றனர். அவர்கள் எமது நாட்டின் எதிர்காலம் குறித்து மிக சரியான பார்வையைக் கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் நாட்டினதும் அரசாங்கத்தினதும் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கு மிகுந்த பொறுப்புடன் செயற்படுகின்றனர். இந்த ஒத்துழைப்பு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பாரம்பரியங்களை பாதுகாத்துள்ளதுடன் உலகின் உழைக்கும் மக்களின் கௌரவத்திற்கு பங்களிப்பு செய்யும் நாட்டை கட்டியெழுப்புவதிலும் உதவியுள்ளது. இந்நிலையில் உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற ஒரு சமூகத்தை இன்று நாம் கட்டியெழுப்பியுள்ளோம். உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனுபவிக்கும் பெரும்பாலான உரிமைகளை எமது மக்கள் இன்று அனுபவிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், உழைக்கும் மக்களின் கல்வி, தொழில்நுட்பம், போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய துறைகளின் வளர்ச்சியும் மேம்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல இன்றைய சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் திட உறுதியுடனும் அர்ப்பணத்துடனும் கைகோர்ப்போம். எமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு செய்யும் உழைக்கும் மக்களுக்கும் தொழிற்ச்சங்க செயற்பாடுகளுக்கும் வெற்றி கிடைக்க வேண்டுமென தான் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மே தின செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment