Thursday, May 30, 2013

தனிமையில் செல்லும் பெண்களை மேற்பார்வை செய்கின்றது சவுதி அரசு! கணவர் அல்லது தந்தையின் துணை.........

சவுதி அரேபியாவில் பெண்கள் தமது கணவர் அல்லது தந்தையின் துணை இல்லாமல் நாட்டை விட்டு வெளியே செல்கிறார்களா என்பதை, சவுதி அரசு இலத்திரனியல் முறையில் மேற்பார்வை செய்யும் திட்டத்தை கடந்த வாரம் முதல் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இலத்திரனியல் மேற்பார்வை முறையை சவுதி அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை இருந்தாலும், அப்படியொரு மேற்பார்வை முறை உள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த வாரத்திலிருந்து சவுதி பெண்கள் நாட்டை விட்டு வெளியே செல்லும்போது, அந்த பெண்களின் ஆண் பாதுகாவலர் கணவர் அல்லது தந்தைக்கு சவுதி விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்திலிருந்து இருந்து குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படுகின்றது. இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், அந்த பெண் நாட்டை விட்டு வெளியே சென்றது அவரது கணவருடன் என்றாலும், எஸ்.எம்.எஸ். வருகிறது.

கடந்த ஆண்டு சவுதி பெண்களுக்கு கார் செலுத்தும் உரிமை வேண்டும் என்று குரல்கொடுத்த பெண்ணுரிமைவாதி மனால் அல்-ஷெரீஃப், இந்த விவகாரத்தை போட்டு உடைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனக்கு தெரிந்த தம்பதிகள் வெளிநாடு பயணம் மேற்கொள்ள ரியாத் விமான நிலையம் சென்றிருந்தபோது, விமானம் ஏறுமுன், கணவருக்கு எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. சவுதி விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்திலிருந்து அனுப்பப்பட்ட அந்த எஸ்.எம்.எஸ்.ஸில், 'உங்கள் மனைவி, ரியாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்கிறார்' என குறிப்பிடப்பட்டிருந்தது' என்று தமது ட்விட்டரில் தகவல் வெளியிட்டிருக்கிறார், மனால் அல்-ஷெரீஃப்.

அதனையடுத்தே இந்த விஷயம் வெளியே தெரியவந்துள்ளது. சவுதி அரசு இது பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com