Sunday, May 5, 2013

நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்கம் விளைவிப்பவர்களிடமிருந்து நாட்டைக் காப்போம்! - சம்பிக்க ரணவக்க

இப்போது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு மூலகாரணம் வெள்ளைக் கழுத்துப் பட்டி அணிந்த சிலரே என மின்வலு மற்றும் சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிடுகிறார்.

ஆங்கில வாரப் பத்திரிகையொன்றுக்கு கருத்துரைத்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ‘நாட்டுக்கு அநியாயம் செய்யும் இந்நபர்களிடம் பொருளாதாரம் பற்றிய எந்தவொரு அறிவும் கிடையாது. தூரநோக்கும் கிடையாது. எனவேவெள்ளைக் கழுத்துப் பட்டியினரிடமிருந்து நாட்டைக் காக்க வேண்டிய தேவை யிருக்கிறது. இவர்களுக்கு அரசாங்கத்தின் மின்கட்டணம் பேசுவதற்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது. அவர்களுக்கு அவ்வாறு வாய்திறக்க இடமளிக்கவும் மாட்டோம்.’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘மின்வலு மற்றும் சக்தி விடயத்தில் எல்லோரும் நினைத்தவாறு நடந்துகொள்ள முடியாது. அத்துறை மிகவும் அவதானிக்கத்தக்க ஒரு பிரிவாகும். சாலைகள் அபிவிருத்தி முதலானவையும் தேவைகள்தான் என்றாலும், மிக முக்கிய தேவையாக இருப்பது மின்சாரப் பிரிவாகும். நாங்கள் வெகுவிரைவில் பெற்றோல் மற்றும் நிலக்கரி என்பவற்றுப் பதிலாக ‘கேஸ்’ பாவிக்காதவிடத்து விரைவில் மின்வலுப் பிரச்சினை மேலெழும். எனவே, நாங்கள் அதற்கேற்றாற் போல செயற்பட வேண்டிய தேவையுள்ளது. அவ்வாறு செய்யாதுவிடின் நாட்டின் பொருளாதாரம் வெகுவிரைவில் படுபாதாளத்தை நோக்கிச் செல்லும்.’

‘இந்த மின்வலுப் பிரச்சினைக்கு மூல காரணம் 1990 களின் பின்னர் எந்தவொரு மின் நிலையமும் புதிதாக உருவாக்கப்படாமையாகும். மகாவெலிக்குப் பின்னர் மாவனல்லை, புத்தளம், மற்றும் ஏனைய சில பிரதேசங்களிலும் மின் நிலையங்களை அமைப்பதற்கான யோசனைகளை மின்சார சபையின் பொறியியலாளர்கள் முன்வைத்தனர். சிற்சில காரணங்களால் அவற்றில் எதுவொன்றும் நடைபெறவில்லை.’ என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில காலங்களாக அமைச்சர் விமல் வீரவன்சவும் பொருளாதாரத்தை நாசம் செய்யக்கூடிய சக்திகள் யார் என்பதை விபரித்திருந்தார். என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

No comments:

Post a Comment